கூடுதலாக நெல் மூடைகள் கொள்முதல் செய்யப்படுமா?


கூடுதலாக நெல் மூடைகள் கொள்முதல் செய்யப்படுமா?
x
தினத்தந்தி 26 Jan 2022 7:20 PM GMT (Updated: 26 Jan 2022 7:20 PM GMT)

தேவதானம் நெல் கொள்முதல் நிலையத்தில் கூடுதலாக நெல் மூடைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தளவாய்புரம், 
தேவதானம் நெல் கொள்முதல் நிலையத்தில் கூடுதலாக நெல் மூடைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். 
கொள்முதல் நிலையம் 
சேத்தூர் அருகே தேவதானம் அரசு நெல் கொள்முதல் நிலையம் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தப்பகுதியில் தற்போது பெரும்பாலான விவசாயிகள் நெல் அறுவடை செய்து விட்டனர். அறுவடை செய்த நெல்லை இங்குள்ள கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்து கொள்முதல் செய்ய காத்திருக்கின்றனர். 
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- நாங்கள் நெல்லை அறுவடை செய்து ஒருவார காலம் ஆகிவிட்டது. இங்கு இன்னும் எங்கள் நெல் கொள்முதல் செய்யவில்லை. கடந்த சில நாட்களாக தினமும் 600 மூடை நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மழை பெய்ததால் 200 நெல் மூடைகள் மட்டுமே கொள்முதல் செய்தனர். 
எந்திரங்கள் 
கடந்த ஆண்டு இங்கு இரண்டு நெல் கொள்முதல் செய்யும் எந்திரம் பயன்படுத்தப்பட்டது. இவற்றால் தினமும் ஆயிரம் நெல் மூடைகள் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது திடீரென மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. 
இங்கு நெல் கொள்முதல் செய்ய காலதாமதம் ஆவதால் சில விவசாயிகள் தனியாரிடம் தங்களது நெல் மூடைகளை ரூ.1,100-க்கு கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் இவர்களுக்கு ரூ.400 நெல் மூட்டைக்கு குறைவாக கிடைக்கிறது. இதனை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு தேவதானம் நெல் கொள்முதல் நிலையத்தில் 2 எந்திரங்கள் கொண்டு தினமும் ஆயிரம் நெல் மூடைகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story