கால்பந்து பயிற்சி பெற சிறுவர், சிறுமிகள் ஆர்வம்


கால்பந்து பயிற்சி பெற சிறுவர், சிறுமிகள் ஆர்வம்
x
தினத்தந்தி 27 Jan 2022 1:17 PM GMT (Updated: 27 Jan 2022 1:17 PM GMT)

கோத்தகிரி காந்தி மைதானத்தில் கால்பந்து பயிற்சி பெற சிறுவர், சிறுமிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோத்தகிரி

கோத்தகிரி காந்தி மைதானத்தில் கால்பந்து பயிற்சி பெற சிறுவர், சிறுமிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

காந்தி மைதானம்

கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்து உள்ள காந்தி மைதானம், நீலகிரி மாவட்டத்திலேயே மிகவும் புகழ் பெற்றது ஆகும். இங்கு பயிற்சி பெற்ற வீரர்கள் தேசிய மற்றும் மாநில போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.கொரோனா உச்சத்தில் இருந்தபோது, பல மாதங்களாக காந்தி மைதானம் மூடப்பட்டு இருந்ததுடன், வீரர்கள் விளையாட்டு பயிற்சி பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் மைதானம் உரிய பராமரிப்பின்றி காணப்பட்டது. மேலும் குண்டும், குழியுமாக மாறி புதர் செடிகள் வளர்ந்து கிடந்தது.

கால்பந்து பயிற்சி

இதையடுத்து கொரோனா பரவல் குறைந்த பிறகு மைதானத்தில் வளர்ந்திருந்த புதர் செடிகள் முழுவதும் அகற்றப்பட்டு, எந்திரத்தின் உதவியுடன் சமன்படுத்தும் பணி நடைபெற்றது. தற்போது மைதானம் முழுமையாக சீரமைக்கப்பட்ட நிலையில், தினமும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கால்பந்து மற்றும் கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் தங்களது பயிற்சியை மீண்டும் தொடங்கி உள்ளனர்.

ஆர்வம்

இது தவிர தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் கால்பந்து அகாடமிகள் சார்பில் காலை மற்றும் மாலை வேளைகளில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் 30-க்கும் மேற்பட்டோருக்கு கால்பந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

இவர்களுக்கு தமிழ்நாடு கால்பந்து வீரரும், தேசிய பயிற்றுனருமான ஹரி மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்றுநர் மோகன்குமார் ஆகியோர் சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர். கொரோனா பேரிடர் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால், கால்பந்து பயிற்சியில் சிறுவர், சிறுமிகள் ஆர்வம் காட்டுகின்றனர். 


Next Story