உடுமலையில் மாரியம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம்


உடுமலையில் மாரியம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 27 Jan 2022 4:46 PM GMT (Updated: 27 Jan 2022 4:46 PM GMT)

உடுமலையில் மாரியம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம்

உடுமலை:
உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது.
மாரியம்மன் கோவில்
உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம்  கடந்த 1.2.2008-ந்தேதி நடந்தது. ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பதால் கடந்த ஆண்டு கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் தொடங்கப்பட்டன.
மூலவர் கோபுரம், ராஜகோபுரம், திருமதில்கள் ஆகிய இடங்களில் வர்ணம் பூசப்பட்டது. அத்துடன் உற்சவர் சன்னதி புதியதாக கட்டப்பட்டது. இந்த திருப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததைத்தொடர்ந்து  கும்பாபிஷேகம் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
யாக சாலை
அதன்படி நேற்று  கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நிகழ்ச்சிக்காக கோவில் வளாகத்தில் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டிருந்தது. யாகசாலையில் மாரியம்மனுக்கு 9 குண்டங்கள், உற்சவர், விநாயகர், முருகர்,பரிவார மூர்த்திகள் ஆகியோருக்கு தலா ஒரு குண்டம் வீதம் மொத்தம் 13 குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன.  அத்துடன் மாரியம்மன், உற்சவர், விநாயகர், முருகர், பரிவார மூர்த்திகள் ஆகியோருக்கு வேதிகைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் மாரியம்மனுக்கு பிரதான வேதிகை அமைக்கப்பட்டிருந்தது.
சிறப்பு பூஜைகள்
கும்பாபிஷேகம் நிகழ்ச்சிக்கான முதல்நிலை பூஜைகள் கோவில் வளாகத்தில் மாரியம்மன் சன்னதிக்கு முன்பு கடந்த 23-ந்தேதி மங்கள இசையுடன் நடந்தது. 
கோவில் வளாகத்தில் உள்ள சக்தி விநாயகர், செல்வ முத்துக்குமரன், அரச மரத்தடியில் வீற்றிருக்கும் அஷ்ட நாகர்கள், மாரியம்மன் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
மகா கும்பாபிஷேகம்
கடந்த 25-ந்தேதி  யாகசாலையில் முதற்கால யாக வேள்வி நடந்தது. நேற்று முன்தினம் காலையில் 2-ம் கால யாக வேள்வியும்,மாலையில் 3-ம் கால யாக வேள்வியும் நடந்தது. நேற்று காலை 7.35 மணிக்கு மங்கள இசை, 7.40 மணிக்கு 4-ம் கால யாகவேள்வி, நாடிசந்தானம், ஸ்பரிசாகுதி, திரவியாகுதி, மகாபூர்ணாகுதி, மகாதீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. காலை 9.30 மணிக்கு யாத்ரா ஹோமம், கடம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தது.
இதைத்தொடர்ந்து மாரியம்மன், சக்திவிநாயகர், செல்வ
முத்துக்குமரன், உற்சவர் சன்னதிவிமானங்கள் கும்பாபிஷேகம் நிகழ்ச்சிகளும், மூலவர் கும்பாபிஷேகம் நிகழ்ச்சிகளும் நடந்தது. இந்த கோவில் சன்னதிகளின் விமான கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.  அப்போது அந்த பகுதியில் கூடியிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி கும்பிட்டனர். கும்பாபிஷேகம் நிகழ்ச்சிக்கு உபயதாரர்கள் உள்பட பக்தர்கள் குறைந்த அளவிலேயே கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

Next Story