கொலையான தொழிலாளி பிணத்துடன் பொதுமக்கள் மறியல்


கொலையான தொழிலாளி பிணத்துடன் பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 27 Jan 2022 5:15 PM GMT (Updated: 27 Jan 2022 5:15 PM GMT)

வேலூர் கொசப்பேட்டை எஸ்.எஸ்.கே.மானியம் பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் கொலையான தொழிலாளி பிணத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

வேலூர் கொசப்பேட்டை எஸ்.எஸ்.கே.மானியம் பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் கொலையான தொழிலாளி பிணத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளி கொலை

வேலூர் கொசப்பேட்டை எஸ்.எஸ்.கே.மானியம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். அவரது மகன் சீனிவாசன் (வயது 40), டீக்கடை தொழிலாளி. 

நேற்று மாலை அந்த வழியாக நடந்து சென்ற சீனிவாசனை குடிபோதையில் இருந்த அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சீனிவாசன் (43) திடீரென கத்தியால் குத்திக்கொலை செய்தார். 

இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சீனிவாசனை கைது செய்தனர்.

இந்த நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் உயிரிழந்த சீனிவாசன் குடும்பத்தினர் மற்றும் எஸ்.எஸ்.கே.மானியம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் வேலூர் பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே அண்ணா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பூபதிராஜன், இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், நந்தகுமார், சீனிவாசன் ஆகியோர் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

பின்னர் அவர்களை சாலையோரமாக அழைத்து கோரிக்கைகள் குறித்து போலீசார் கேட்டனர்.

பிணத்துடன் சாலை மறியல்

இதற்கிடையே அந்த நேரத்தில் சீனிவாசன் உடல் பிரேத பரிசோதனை முடிந்து ஆம்புலன்சில் அந்த வழியாக அவருடைய வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது.

 இதனை அறிந்த பொதுமக்கள் தெற்கு போலீஸ் நிலையம் அருகே ஆம்புலன்சை மடக்கினர். பின்னர் அதில் இருந்து சீனிவாசன் உடலை இறக்கி சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களிடம் பிணத்தை ஆம்புலன்சில் ஏற்றும்படி கூறினார்கள். ஆனால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி ஆம்புலன்சில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 

அப்போது போலீசாருக்கும், மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள், எஸ்.எஸ்.கே.மானியம் தெருவில் கஞ்சா, மது விற்பனை அமோகமாக நடக்கிறது. இதனை போலீசார் கண்டுகொள்வதே இல்லை. தொடர்ந்து சமூக விரோத செயல்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

 இதனால் அடிக்கடி வழிப்பறி, கத்திக்குத்து, கொலை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. கஞ்சா, மது போதையில் தெருவில் நின்று அட்டகாசம் செய்கின்றனர். தட்டி கேட்டால் மதுப்பாட்டில் மற்றும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.

கண்காணிப்பு கேமராக்கள்

அவர்களை கைது செய்து ஜெயிலில் அடைத்தாலும் 3 மாதங்களில் வெளியே வந்து மீண்டும் அதே செயல்களில் ஈடுபடுகிறார்கள். எனவே இந்த பகுதியில் குற்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. 

அதனால் மது, கஞ்சா விற்பவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும். குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தினமும் போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

எஸ்‌.எஸ்.கே.மானியம் பகுதியில் கஞ்சா, மது விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். 

இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story