திருப்பத்தூர் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்


திருப்பத்தூர் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 27 Jan 2022 5:54 PM GMT (Updated: 27 Jan 2022 5:54 PM GMT)

திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. 

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உள்ளாட்சி தேர்தல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை திருப்பத்தூர் ஆகிய 4 நகராட்சிகளில் மொத்தம் 120 வார்டுகள் மற்றும் ஆலங்காயம், உதயேந்திரம், நாட்டறம்பள்ளி ஆகிய 3 பேரூராட்சிகளில் மொத்தம் 45 வார்டுகள் ஆகியவற்றிற்கு வாக்குப்பதிவு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 19-ந் தேதி நடக்கிறது.

நகராட்சி, பேரூராட்சிகளுக்கு 7 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மற்றும் 20 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இத்தேர்தலில் 3 லட்சத்து 11 ஆயிரத்து 335  வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

வேட்புமனு தாக்கல்

வேட்பு மனுதாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பெறப்பட உள்ளது. நகராட்சி வார்டு உறுப்பினருக்கு அந்தந்த நகராட்சி அலுவலகங்களில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் பெறப்படும். பேரூராட்சி வார்டு உறுப்பினருக்கு அந்தந்த பேரூராட்சி அலுவலகங்களில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் பெறப்படும்.

வேட்பாளர்களின் கல்வி தகுதி, சொத்து விவரம், குற்றவியல் நடவடிக்கை விவரம் ஆகியவற்றை வேட்பு மனுவுடன் ரூ.20-க்கான முத்திரை தாளில் உறுதி ஆவணம் மற்றும் 3 ஏ சுருக்கப் படிவத்துடன் வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.

கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக வேட்பாளர்கள் வேட்பு மணுவினை தாக்கல் செயய வேட்பாளர் அல்லது முன்மொழிபவர் மட்டுமே அலுவலகத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.

மேலும் தேர்தல் நடத்தை விதிகள் நகர்ப்புற பகுதிகளுக்கும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிற்கு அருகில் உள்ள பகுதிகளில் 5 கிலோமீட்டர் சுற்றளவு வரையும் அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கலெக்டர் ஆய்வு

நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து வாணியம்பாடி நகராட்சி, உதயேந்திரம் பேரூராட்சி, ஆலங்காயம் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று காலை திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான அமர்குஷ்வாஹா திடீரென ஆய்வு மேற்கொண்டார். 

ஒவ்வொரு அலுவலகத்திற்கு சென்று அங்கு தேர்தல் நடத்துவதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடு பணிகள் குறித்தும், பாதுகாப்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது, அனைத்து முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, தாசில்தார் சம்பத், வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு, உதயேந்திரம் பேரூராட்சி அலுவலக குருசாமி, ஆலங்காயம் பேரூராட்சி அலுவலர் கணேசன், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர். Next Story