மராட்டியத்தில் சூப்பர் மார்க்கெட்களில் ஒயின் விற்க அனுமதி


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 27 Jan 2022 5:56 PM GMT (Updated: 27 Jan 2022 5:56 PM GMT)

மராட்டியத்தில் சூப்பர் மார்க்கெட்களில் ஒயின் விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மும்பை, 
மராட்டியத்தில் சூப்பர் மார்க்கெட்களில் ஒயின் விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒயின் விற்க அனுமதி
மராட்டியத்தில் தற்போது மதுபான கடைகளில் மட்டுமே ஒயின் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மாநிலத்தில் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகளில் ஒயின் பாட்டில்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள தகவலில், சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் 100 சதுர மீட்டர், அதற்கு மேல் உள்ள வாக்-இன் கடைகளில் ஒயின் பாட்டில்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுவதாக கூறப்பட்டு உள்ளது. 
அதே நேரத்தில் வழிப்பாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள கடைகளில் ஒயின் பாட்டில்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல மதுவிலக்கு அமலில் உள்ள மாவட்டங்களிலும் கடைகளில் மதுவிற்பனை செய்ய முடியாது. இதேபோல ஒயின் விற்பனை செய்ய கடைகள் அரசுக்கு ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும். பழச்சாறு மூலம் தயாரிக்கப்படும் ஒயின் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மந்திரி நவாப் மாலிக் கூறினார்.
பா.ஜனதா கண்டனம்
எனினும் மாநில அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சியான பா.ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், " மராட்டியத்தை மத்திய-ரஸ்தா (மது மாநிலம்) மாநிலமாக்க நாங்கள் விடமாட்டோம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காலத்தில் மாநில அரசு பொது மக்களுக்கு எதையும் செய்யவில்லை. ஆனால் அதன் மதுவை ஊக்கப்படுத்துவது அதன் முக்கியத்துவமாக உள்ளது " என்றார்.

Next Story