வருகிற 31-ந் தேதி பெங்களூருவில் பள்ளிகள் திறப்பு?


வருகிற 31-ந் தேதி பெங்களூருவில் பள்ளிகள் திறப்பு?
x
தினத்தந்தி 27 Jan 2022 8:32 PM GMT (Updated: 27 Jan 2022 8:32 PM GMT)

பெங்களூருவில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறப்பது குறித்து நாளை(சனிக்கிழமை) முடிவு எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறியுள்ளார்.

பெங்களூரு: பெங்களூருவில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறப்பது குறித்து நாளை(சனிக்கிழமை) முடிவு எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறியுள்ளார்.

உயிரிழப்பு குறைவு

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பரவல் அதிகரித்து இருந்தாலும், அதனால் ஏற்படும் உயிரிழப்பு மிக குறைவாக இருக்கிறது. நோயின் தீவிரத்தன்மை குறைவாகவே உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறினர். இதையடுத்து கர்நாடகத்தில் தலைநகர் பெங்களூரு தவிர மாநிலத்தின் பிற மாவட்டங்களில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு அனுமதி வழங்கியது.

அதன்படி பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பெங்களூருவிலும் பள்ளிகளை திறக்க கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பள்ளிகளை திறக்க...

பெங்களூருவில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகளை வருகிற 31-ந் தேதி முதல் திறக்க அரசு ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து நிபுணர் குழுவின் ஆலோசனையை கேட்டுள்ளோம். மாநில அரசு இதற்கு அனுமதி வழங்கினால் 31-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இதுகுறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். இந்த ஆலோசனை கூட்டம் 29-ந் தேதி (நாளை) நடைபெறும். இதில் பள்ளிகளை திறப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.

Next Story