ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 31 பேர் காயம்


ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 31 பேர் காயம்
x
தினத்தந்தி 27 Jan 2022 9:21 PM GMT (Updated: 27 Jan 2022 9:21 PM GMT)

சமயபுரம் அருகே மேட்டு இருங்களூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் 31 பேர் காயமடைந்தனர்.

சமயபுரம்
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூரில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாமக்கல், மதுரை, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 590  ஜல்லிக்கட்டு காளைகளை அதன் உரிமையாளர்கள் லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களில் அழைத்து வந்திருந்தனர். இதேபோல பல்வேறு இடங்களில் இருந்து 260 மாடுபிடி வீரர்கள் வந்திருந்தனர்.
சீறிப்பாய்ந்த காளைகள்
அதனைத்தொடர்ந்து காலை 8.30 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதனை லால்குடி ஆர்.டி.ஓ. வைத்தியநாதன், மண்ணச்சநல்லூர் தாசில்தார் சக்திவேல் முருகன், ஊராட்சி தலைவர் வின்சென்ட் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், பங்கேற்ற வீரர்கள் தனித்தனி குழுவாக பிரிக்கப்பட்டு மைதானத்திற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதை யாரும் பிடிக்கவில்லை. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை இளம் காளையர்கள் விரட்டி சென்று பிடிக்க முயன்றனர். அதில், சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் மிரட்டின. ஒருசில காளைகளை வீரர்கள் அடக்கி பரிசு பொருட்களை தட்டிச் சென்றனர். வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
31 பேர் காயம்
ஜல்லிக்கட்டில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ.வின் கொம்பன் காளையும் களமிறங்கியது. அது, வீரர்களின் பிடியில் அகப்படாமல் ஓடியது. அதேபோல மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. கதிரவன் காளையும் களமிறங்கியது. அதுவும் வீரர்களின் பிடியில் அகப்படாமல் பரிசை வென்றது.
இந்த போட்டியில் காளைகளை அடக்கியபோது காளைகள் முட்டியதில் வீரர்கள் மற்றும் வேடிக்கை பார்த்தவர்கள் உள்பட 31 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர்  சிகிச்சை அளித்தனர். அவர்களில் 2 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக திருச்சி மற்றும் இருங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டை காண்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்கள் வாடிவாசலின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர்கள் மற்றும் லாரிகளில் ஏறி நின்று ரசித்து பார்த்தனர்.
போலீசார் பாதுகாப்பு
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பால்வண்ணநாதன் மேற்பார்வையில், லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன் தலைமையில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார், ஊர்க்காவல்படையினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஜான் பிரிட்டோ உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
டோக்கன் கிடைக்காததால் ஏமாற்றம்
ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தில் நேற்று ஏராளமானோர் கூடியதால் விழாக்கோலம் பூண்டிருந்தது. டிபன் கடை, தள்ளுவண்டி கடைகள் மற்றும் ஐஸ்கிரீம் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. முன்னதாக போட்டியில் பங்கேற்பதற்காக காளைகளுக்கு டோக்கன் வழங்கும் பணியை விழாக் குழுவினர் செய்திருந்தனர். ஆனால், காளையின் உரிமையாளர்கள் பலருக்கு டோக்கன் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.

Next Story