ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளித்த மாற்றுத்திறனாளி வாலிபர் மீது போலீசார் தாக்குதல்; இளைஞர்கள் போராட்டம்


ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளித்த மாற்றுத்திறனாளி வாலிபர் மீது போலீசார் தாக்குதல்; இளைஞர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 28 Jan 2022 4:09 PM GMT (Updated: 28 Jan 2022 4:09 PM GMT)

ஆண்டிப்பட்டி அருகே ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளித்த மாற்றுத்திறனாளி வாலிபர் மீது போலீசார் தாக்கியதாக இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.

ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வரதராஜபுரத்தை சேர்ந்த இளைஞர்கள் நேற்று அங்குள்ள கண்மாய் பகுதியில் வாடிவாசல் போன்று தடுப்புகள் அமைத்து ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராஜதானி போலீசார் அங்கு சென்றனர். அப்போது அனுமதியின்றி ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளித்ததாக வரதராஜபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான ராம்குமார் (வயது25) என்பவரை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. 
இதனை கண்டித்து வரதராஜபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் வரதராஜபுரம் கண்மாய் பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாற்றுத்திறனாளி வாலிபரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோஷமிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு தங்ககிருஷ்ணன் நேரில் வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 
அப்போது, அனுமதியின்றி ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது, முறையாக அனுமதி பெற்றுதான் இதுபோன்ற பயிற்சிகளை நடத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். மேலும் வாலிபர் மீது தாக்கிய போலீசார் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனையடுத்து இளைஞர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story