குமரி மாவட்டத்தில் 1,324 வாக்குச்சாவடியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 192 பதற்றமானவை என கலெக்டர் தகவல்


குமரி மாவட்டத்தில் 1,324 வாக்குச்சாவடியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 192 பதற்றமானவை என கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 28 Jan 2022 5:20 PM GMT (Updated: 28 Jan 2022 5:20 PM GMT)

குமரி மாவட்டத்தில் 1,324 வாக்குச்சாவடியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 192 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் 1,324 வாக்குச்சாவடியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 192 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
குமரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், வருவாய்த்துறை அதிகாரி சிவப்பிரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாகராஜன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குற்றாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேர்தல் நன்னடத்தை அமல்
கூட்டத்தை தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது. குமரி மாவட்டத்தில் உள்ள 51 பேரூராட்சிகள், 4 நகராட்சிகள் மற்றும் ஒரு மாநகராட்சிக்கு தேர்தல் நடக்க இருக்கிறது.
குமரி மாவட்டம் குறைந்த பரப்பளவு கொண்டதால், அனைத்து பகுதிகளிலும் தேர்தல் நன்னடத்தை அமலில் இருக்கும். சுவரொட்டிகள் மற்றும் அரசியல் விளம்பரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் 2 நாட்களில் முடிவடையும்.
நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளிலும், 4 நகராட்சிகளிலும் உள்ள 99 வார்டுகளுக்கும் மற்றும் 51 பேரூராட்சிகளில் உள்ள 828 வார்டுகள் என மொத்தம் 979 வார்டுகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் 233 வாக்குச்சாவடிகள், நகராட்சிகளில் 140 வாக்குச்சாவடிகள் மற்றும் பேரூராட்சிகளில் 951 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
பறக்கும் படை குழுக்கள்
கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் வகையில் வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மேடைகள் அமைத்து பிரசாரம் செய்யவும், சாலைகளில் வாகன பிரசாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மண்டபங்கள், அரங்கங்களில் நடைபெறும் தேர்தல் பிரசாரத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இது தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் போலீசாரிடம் தடையில்லா சான்று பெற வேண்டும்.
தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க மாவட்டம் முழுவதும் 25 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் சுழற்சி முறையில் 3 கட்டங்களாக பணியாற்றுவார்கள். பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளாக 192 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.
10 லட்சம் வாக்காளர்கள்
நாகர்கோவில் மாநகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 1,20,670 பேரும், பெண் வாக்காளர்கள் 1,23,850 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 11 என மொத்தம் 2,44,531 வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல 4 நகராட்சிகளிலும் ஆண் வாக்காளர்கள் 53,764 பேரும், பெண் வாக்காளர்கள் 54,957 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 10 பேரும் என மொத்தம் 1,08,731 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
51 பேரூராட்சிகளில் 3,35,832 ஆண் வாக்காளர்களும், பெண் வாக்காளர்கள் 3,35,812 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 43 பேரும் என மொத்தம் 6,71,687 வாக்காளர்கள் உள்ளனர்.
இதன் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 10,24,949 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story