பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடிய ராமேசுவரம் கோவில்


பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடிய ராமேசுவரம் கோவில்
x
தினத்தந்தி 28 Jan 2022 5:57 PM GMT (Updated: 28 Jan 2022 5:57 PM GMT)

தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையிலும் ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

ராமேசுவரம், 
தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையிலும் ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. 
தடை  
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மூன்று வாரத்திற்கு மேலாக வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வாரத்தில் மூன்று நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் செல்ல அரசால் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் எல்லா நாட்களிலும் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்யலாம் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
அதைத்தொடர்ந்து ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் வெள்ளிக்கிழமையான நேற்று வழக்கம்போல் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு தரிசனம் செய்ய வந்தனர். வெள்ளி, சனி ஞாயிறு 3 நாட்கள் வழக்கம்போல் தரிசனம் என்ற அறிவிப்பு நேற்று முன்தினம் இரவில் அறிவிக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்களுக்கு கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதி என்ற தகவல் சரிவர தெரியாததால் ராமேசுவரம் கோவிலில் நேற்று முழுவதும் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் சுவாமி மற்றும் அம்பாள் சன்னதியின் இலவச தரிசன பாதை மற்றும் சிறப்பு தரிசன பாதை வெறிச்சோடி காணப்பட்டது. குறிப்பாக கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தில் பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் அமைதியாக காணப்பட்டது. 
தை அமாவாசை 
இந்நிலையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தை அமாவாசை வருகிறது. வழக்கமாக தை அமாவாசை நாளன்று அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி இறந்து போன முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி திதி தர்ப்பண பூஜை செய்து சாமியை தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு ஊர்களை சேர்ந்த சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவது வழக்கம். ஆனால் இந்த தை அமாவாசை அன்று ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடி திதி தர்ப்பணம் பூஜை செய்யவும், கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் அனுமதி உண்டா?இல்லையா? என்பது குறித்து இதுவரையிலும் அதிகாரபூர்வமாக கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்தாலும் அறிவிப்பு வராததால் பக்தர்கள் மத்தியில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. 
ஆகவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கை மற்றும் விருப்பமாக உள்ளது.

Next Story