திண்டுக்கல் கலெக்டர் வீடு அருகே பெண் பூ வியாபாரியை எரித்து கொல்ல முயன்ற தொழிலாளி தானும் தீ வைத்து கொண்டதால் பரபரப்பு


திண்டுக்கல் கலெக்டர் வீடு அருகே பெண் பூ வியாபாரியை எரித்து கொல்ல முயன்ற தொழிலாளி  தானும் தீ வைத்து கொண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 28 Jan 2022 7:16 PM GMT (Updated: 28 Jan 2022 7:16 PM GMT)

திண்டுக்கல்லில், கலெக்டர் வீடு அருகே பெண் பூ வியாபாரியை எரித்து கொல்ல முயன்ற தொழிலாளி தானும் தீ வைத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்:
திண்டுக்கல் ரோமன்மிஷன்தெருவை சேர்ந்தவர் மணிமேகலை (வயது 47). இவருடைய கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். மேலும் திண்டுக்கல் பஸ்நிலையம் எதிரே கலெக்டர் வீட்டு அருகே மணிமேகலை பூ வியாபாரம் செய்து வாழ்ந்து வருகிறார்.
இந்தநிலையில் பாரதிபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ரவிச்சந்திரன் (42) என்பவர் மணிமேகலைக்கு அறிமுகம் ஆனார். அவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர்.‌ இதற்கிடையே ரவிச்சந்திரன் மற்றும் மணிமேகலை சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
கருத்து வேறுபாடு
இந்தநிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மணிமேகலை தனது மகளுடன் வசித்து வருகிறார். ஆனால் மணிமேகலையை தன்னுடன் சேர்ந்து வாழ வரும்படி ரவிச்சந்திரன் வற்புறுத்தியதாகவும், அதற்கு மணிமேகலை மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
தீ வைப்பு 
இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் மணிமேகலை வழக்கம்போல் பூ வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரவிச்சந்திரன் மறைத்து எடுத்து வந்த பெட்ரோலை தனது உடலிலும், மணிமேகலையின் மீதும் ஊற்றினார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிமேகலை சுதாரிப்பதற்குள் ரவிச்சந்திரன் தீ வைத்து விட்டார்.
இதனால் 2 பேரின் மீதும் குபீரென தீ பற்றியது. உடல் முழுவதும் தீ பிடித்ததால் அவர்கள் வலியால் அலறினர். அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து 2 பேரையும் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story