சுங்கத்துறை அதிகாரி வீட்டில் திருடிய மேலும் ஒருவர் கைது


சுங்கத்துறை அதிகாரி வீட்டில் திருடிய மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 28 Jan 2022 7:32 PM GMT (Updated: 28 Jan 2022 7:32 PM GMT)

தூத்துக்குடியில் சுங்கத்துறை அதிகாரி வீட்டில் நகையை திருடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி பிரையண்ட்நகரை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (வயது 56). இவர் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் சுங்கத்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 25.7.21 அன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றார். 

மீண்டும் 30.7.21 அன்று வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. 

இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மேற்பார்வையில், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், பென்சிங், மாணிக்கராஜா, மகாலிங்கம், சாமுவேல், முத்துப்பாண்டி, செந்தில்குமார், திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
 
இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், விருதாச்சலம் சந்துகடல் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (40), நெல்லை தாழையூத்தை சேர்ந்த மகாராஜன் (26), விருதாச்சலம் கோபூவானூரை சேர்ந்த அய்யப்பன் (35) உள்ளிட்ட சிலர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார், பாலகிருஷ்ணன், மகாராஜன், அய்யப்பன் ஆகிய 3 பேரையும் ஏற்கனவே கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நாங்குநேரி திருக்குறுங்குடியை சேர்ந்த சிவபெருமாள் மகன் சுரேஷ் என்ற ஜூட்டு சுரேஷ் (32) என்பவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. 

இதனால் போலீசார் தொடர்ந்து சுரேசை தேடி வந்தனர். நேற்று அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான 20 பவுன் தங்கநகைகளையும் மீட்டனர். தொடர்ந்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story