பிளஸ்-2 மாணவி தற்கொலை விவகாரத்தில் பரபரப்பு வாதம்


பிளஸ்-2 மாணவி தற்கொலை விவகாரத்தில் பரபரப்பு வாதம்
x
தினத்தந்தி 28 Jan 2022 7:46 PM GMT (Updated: 28 Jan 2022 7:46 PM GMT)

பிளஸ்-2 மாணவி தற்கொலை விவகாரத்தில் பரபரப்பு வாதம் நடந்தது. பின்னர் தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

பிளஸ்-2 மாணவி தற்கொலை விவகாரத்தில் பரபரப்பு வாதம் நடந்தது. பின்னர் தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இடையீட்டு மனு

தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ்-2 மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த விவகாரம் குறித்து தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறி மாணவியின் தந்தை முருகானந்தம், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி  ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து வருகிறார். அதே நீதிபதி முன்பு நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக சேர்க்கக்கோரி திருச்சியை சேர்ந்த ரோசரி என்பவர் சார்பில் இடையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. 
அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-
இமாகுலேட் ஆர்ட் மேரி சபையின் தலைமை கன்னியாஸ்திரியாக உள்ளேன். இந்த சபை மூலமாக ஏராளமான கல்வி நிறுவனங்களையும், உதவி மையங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.

மதமாற்றம் நடப்பதில்லை

இந்த சபையின்கீழ், தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டி கிராமத்தில் 1923-ம் ஆண்டு பள்ளி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் பல்வேறு மதத்தை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவி லாவண்யாவுக்கு எதிர்பாராதவிதமாக உடல்நிலை சரியில்லாததால் கடந்த 9-ந்தேதி அன்று முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு, உடனடியாக வீட்டுக்கு அனுப்பப்பட்டார். மாணவி இறந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரி மாணவியின் தந்தை முருகானந்தம், மதுரை ஐகோர்ட்டில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், எங்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவியை இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாற கட்டாயப்படுத்தியதாக முருகானந்தம் கூறியுள்ளார். ஆனால் நாங்கள் நடத்தக்கூடிய பள்ளிகளில் இதுபோன்ற எந்தவிதமான மதமாற்றமும் நடப்பதில்லை. ஆண்டுதோறும் ஏராளமான மாணவர்கள் எங்கள் கல்வி நிறுவனங்களில் படித்து வெளியேறுகின்றனர். பல ஆண்டுகளாக இந்த கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுவரை இதுபோன்ற புகார்கள் எழுந்ததில்லை. இந்த மாணவி விஷயத்திலும் இதுபோன்ற நடவடிக்கை இல்லை. இந்த வழக்கில் எங்களையும் ஒரு தரப்பினராக சேர்க்க வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைப்போம்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

சி.பி.ஐ. விசாரணை தேவை

பின்னர் மாணவியின் தந்தை தரப்பில் ஆஜரான வக்கீல், மாணவி தனது சித்தியிடம் பள்ளியில் மதமாற்றம் செய்யுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். அவர் விஷம் அருந்தி சிகிச்சையில் இருந்தபோது உறவினர்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலத்தை யார் வேண்டுமானாலும் பெறலாம். அதன்படி இந்த வாக்குமூலம் சம்பந்தமாக போலீசாரிடம் புகார் கொடுத்தால், அதை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். சைபர் கிரைம் விசாரணைக்காக செல்போன் உள்ளிட்ட சாதனங்களை சென்னைக்கு அனுப்பியுள்ளனர்.
போலீசாரின் விசாரணை எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. மாணவியின் இறப்பில் மதமாற்றம் என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேட்டி அளிக்கிறார். மேலும் மாணவி புகார் சம்பந்தமாக ஆவணங்கள் ரகசியமாக வைக்கப்படாமல் உள்ளன. மாணவியை மதமாற்ற முயன்றது தொடர்பான வாக்குமூல வீடியோவில் முக்கிய காட்சிகள் நீக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பி இருப்பது எங்களுக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
எனவே மத்திய புலனாய்வு அமைப்பு இந்த விவகாரத்தை விசாரித்தால்தான் உரிய தீர்வு கிடைக்கும் என மாணவியின் உறவினர்கள் விரும்புகின்றனர். எனவே இந்த வழக்கின் அனைத்து விசாரணையையும் சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு முருகானந்தத்தின் வக்கீல் வாதாடினார்.

64 சாட்சிகள்

அதன்பின் ஆஜரான அரசு தரப்பு வக்கீல், “மனுதாரரின் குற்றச்சாட்டுகளை ஆவணமாக தாக்கல் செய்யும்பட்சத்தில் உரிய பதில் அளிக்கப்படும். இந்த வழக்கு குறித்த போலீசாரின் விசாரணைக்கு, மாணவியின் உறவினர்கள், வீடியோ எடுத்த முத்துவேல் தரப்பில் ஒத்துழைக்க மறுக்கின்றனர். உரிய முறையில் விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 64 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டு உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்துவிட்டது. சென்னையில் இருந்து தடயஅறிவியல் அறிக்கை கிடைத்த உடன், வழக்கு விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும். மதமாற்றம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்பிற்கு மாற்ற அவசியம் இல்லை” என வாதாடினார்.

தீர்ப்பு ஒத்திவைப்பு

பின்னர் பள்ளி நிர்வாகம் தரப்பில் ஆஜரான வக்கீல், “மனுதாரரின் மகள் நன்றாக படிக்கக்கூடியவர். அதனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் நீண்டநாளாக பள்ளிக்கு வராமல் இருந்தபோதும், செல்போன் மூலம் அவரை பள்ளிக்கு வரவழைத்தோம். ஏற்கனவே இருந்த நோயால் அவதிப்பட்ட அவருக்கு பள்ளியில் உரிய சிகிச்சை அளித்து வந்தோம். மதமாற்றம் என்ற குற்றச்சாட்டுக்கு இடமே இல்லை. மாணவியின் சித்தியின் முரணான செயல்பாடுகள்தான் இந்த நிலைக்கு காரணம் என சந்தேகிக்கிறோம்” என்று தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Related Tags :
Next Story