வங்கியில் திடீர் தீ; ஆவணங்கள் எரிந்து நாசம்


வங்கியில் திடீர் தீ; ஆவணங்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 28 Jan 2022 9:13 PM GMT (Updated: 28 Jan 2022 9:13 PM GMT)

சிவமொக்கா டவுனில் உள்ள வங்கியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் பழைய ஆவணங்கள் எரிந்து நாசமானது.

சிவமொக்கா: சிவமொக்கா டவுனில் உள்ள வங்கியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் பழைய ஆவணங்கள் எரிந்து நாசமானது. 

வங்கியில் திடீர் தீ

சிவமொக்கா டவுனில் நேரு சாலையில் ஸ்டேட் பேங்க் ஆப் மராட்டியம் வங்கி உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை 9.45 மணி அளவில் திடீரென்று வங்கியில் இருந்து புகைமூட்டம் வெளியேறியது. மேலும் ஒரு அறையில் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் வங்கி ஊழியர்களுக்கு தெரியப்படுத்தினர். 

இதற்கிடையே அங்கு பணியாற்றும் காவலாளி அந்த சமயத்தில் வங்கிக்கு வந்தார். உடனே அவர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். 

பழைய ஆவணங்கள் எரிந்து நாசம்

அப்போது வங்கியின் பழைய ஆவணங்கள் இருந்த அறையில் தீப்பிடித்தது தெரியவந்தது. அங்கிருந்த ஆவணங்களில் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. உடனே தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இதில் பெரும்பலான பழைய ஆவணங்கள் எரிந்து நாசமானது. சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முழுவதும் அணைக்கப்பட்டது. 

மேலும், தீ மற்ற அறைகளுக்கும் பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால் கம்ப்யூட்டர்கள், பணம், முக்கிய ஆவணங்கள் தீக்கிரையாகாமல் தப்பின. 

மின்கசிவு காரணம்

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததும், வங்கியின் பழைய ஆவணங்கள் மட்டும் தீயில் நாசமானதும் தெரியவந்தது. மேலும் உடனே தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

இதுகுறித்து தொட்டபேட்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தீவிபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஏராளமானோர் வங்கி முன்பு கூடியிருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

Next Story