5½ டன் வேளாண் விளை பொருட்கள் ஏலம்


5½ டன் வேளாண் விளை பொருட்கள் ஏலம்
x
தினத்தந்தி 29 Jan 2022 4:19 PM GMT (Updated: 29 Jan 2022 4:19 PM GMT)

5½ டன் வேளாண் விளை பொருட்கள் ஏலம்

முத்தூர்:
முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 5½ டன் வேளாண் விளை பொருட்கள் ஏலம் விடப்பட்டது.
ஒழுங்குமுறை விற்பனை கூடம்
திருப்பூர் மாவட்டம் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருட்களின் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலங்களில் முத்தூர் நகர மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி விவசாயிகள் மற்றும் ஈரோடு மாவட்டம் கொல்லன் கோவில், சிவகிரி பேரூராட்சி பகுதிகள், அஞ்சூர் ஊராட்சி மற்றும் கரூர் மாவட்டம் அஞ்சூர், கார்வழி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நேரில் கலந்து கொண்டு தங்களது வேளாண் விளை பொருட்களை விற்று பலன் அடைந்து வருகின்றனர்.
இதன்படி நேற்று காலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 9 ஆயிரத்து 476 தேங்காய்களை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் 1 கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.27.35-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.23.15-க்கும், டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது. மேலும் 65 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் 1 கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.91.30-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.63.60-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது.
தேங்காய் வரத்து அதிகரிப்பு
மேலும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 5 ஆயிரத்து 146 தேங்காய்கள் கூடுதலாகவும், 23 தேங்காய் பருப்பு மூட்டைகள் குறைவாகவும் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதில் தேங்காய் 1 கிலோவிற்கு 30 பைசா குறைவாகவும், தேங்காய் பருப்பு 1 கிலோவிற்கு ரூ.1.15 கூடுதலாகவும் விவசாயிகளுக்கு கிடைத்தது.
மேலும் கடந்த 2 மாத காலமாகவே தேங்காய் பருப்பு கிலோ ரூ.100-க்கும் கீழே சரிந்து விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பகுதிகளில் தற்போது பெய்து வரும் பனிப்பொழிவு காரணமாக தேங்காய் பருப்பு விலை சரிந்து வருகிறது.  இனி வரும் காலங்களில் கோடை காலம் தொடங்கியவுடன் தேங்காய் பருப்பு மீண்டும் கிலோ ரூ.100-ஐ தாண்டி விற்பனையாக வாய்ப்பு உள்ளது.
5½டன் ஏலம்
மேலும் ஒழுங்குமுறைவிற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு மூட்டைகள் 5 ½ டன் அளவில் மொத்தம் ரூ‌.2 லட்சத்து46 ஆயிரத்து 168-க்கு வேளாண் விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டது.
இந்த ஏலங்களில் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களை சேர்ந்த மொத்த கொள்முதல் வியாபாரிகள் தமிழக அரசின் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். 
இத்தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் ஸ்ரீரங்கன் தெரிவித்து உள்ளார்.

Next Story
  • chat