விவசாயி மகளுக்கு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது

விவசாயி மகளுக்கு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது
x
தினத்தந்தி 29 Jan 2022 4:34 PM GMT (Updated: 29 Jan 2022 4:34 PM GMT)

7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் மருத்துவப்படிப்பு படிக்க விவசாயி மகளுக்கு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.டாக்டராகி கிராமப்புற மக்களுக்கு சேவை செய்வதே எனது லட்சியம் என மாணவி கூறினார்.

வேதாரண்யம்:

விவசாயி மகள்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா பெரியகுத்தகை கிராமத்தை சேர்ந்தவர் முருகையன். விவசாயி. மேலும் இவர் கூலி வேலைக்கும் சென்று வருகிறார். இவருடைய மகள் அபிநயா. இவர் தோப்புத்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழியில் பிளஸ்-2 படித்து முடித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
இதை தொடர்ந்து மாணவி அபிநயா மருத்துவ படிப்பு படிக்க விண்ணப்பம் செய்திருந்தார். இதை தொடர்ந்து சென்னையில் நேற்று முன்தினம் நடந்த மருத்துவப்படிப்புக்காக கலந்தாய்வில் அபிநயா கலந்து கொண்டார். இதில் அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்ததால் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மூலம் மாணவி அபிநயாவுக்கு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் படிப்பு படிக்க இடம் கிடைத்துள்ளது.
டாக்டராகி சேவை செய்வேன்
இதுகுறித்து மாணவி அபிநயா கூறுகையில், நான் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தேன். பிளஸ்-2 படித்து முடித்த பிறகு நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்க பண வசதி இல்லாததால் வீட்டில் இருந்தே படித்து நீட்தேர்வில் தேர்ச்சி பெற்றேன். மருத்துவப்படிப்பு பயில தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் நல்ல முறையில் படித்து டாக்டராகி கிராமப்புற மக்களுக்கு சேவை செய்வதே எனது லட்சியம் என்றார்.

Next Story