தர்மபுரி நகராட்சி தேர்தல் பிரசாரத்திற்கு வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே செல்ல வேண்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் அறிவுறுத்தல்


தர்மபுரி நகராட்சி தேர்தல் பிரசாரத்திற்கு வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே செல்ல வேண்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 29 Jan 2022 4:45 PM GMT (Updated: 29 Jan 2022 4:45 PM GMT)

தர்மபுரி நகராட்சி தேர்தலில் வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே பிரசாரத்திற்கு செல்ல வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

தர்மபுரி:
தர்மபுரி நகராட்சி தேர்தலில் வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே பிரசாரத்திற்கு செல்ல வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும், மார்ச் மாதம் 4-ந்தேதி நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களுக்கான மறைமுக தேர்தலும் நடக்கிறது. இந்த நிலையில் தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 
கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் தேர்தல் நடத்தும் அலுவலருமான சித்ரா சுகுமார் தலைமை தாங்கினார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஜெயசீலன், கலைவாணி, ஜெயவர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் மாதையன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
வழிகாட்டு நெறிமுறைகள்
கூட்டத்தில் ஆணையாளர் பேசுகையில், தர்மபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் ஒருவர் மட்டுமே வர வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். வேட்பாளர்கள் டெபாசிட் தொகையாக ரூ.2000 செலுத்த வேண்டும். தேவையில்லாமல் கூட்டம் சேர்க்க கூடாது. 
பிரசாரத்தின் போது ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கூடாது. வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே பிரசாரதிற்கு செல்ல வேண்டும். அப்போது சமூக இடைவெளியுடன் 100 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை அரசியல் கட்சியினர் முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Next Story