‘தினத்தந்தி’ புகார் பெட்டி


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 29 Jan 2022 5:06 PM GMT (Updated: 29 Jan 2022 5:06 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கழிவுநீர் வெளியேறுவதால் துர்நாற்றம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அம்பேத்கர் நகர் பகுதியில் மழைநீர் செல்வதற்கு வடிகால் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த வடிகாலில் வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஜெயங்கொண்டம், அரியலூர்.
அம்பேத்கர் நகர் பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, மறவா மதுரை ஊராட்சி, சடையம்பட்டி கிராமத்தில் உள்ள சாலையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராதா, புதுக்கோட்டை.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மஞ்சமேடு கிராமத்தில் பொது கழிப்பறை உள்ளது. இங்குள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராதா கிருஷ்ணன், கரூர்.

ஆபத்தான குடிநீர் தொட்டி
அரியலூர் மாவட்டம், புதுப்பாளையம் பஞ்சாயத்து நெருஞ்சிக்கோரை கிராமத்தில் குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆபத்தான குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், நெருஞ்சிக்கோரை, அரியலூர்.

புதிய ரேஷன் கடை வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், வேம்பங்குடி மேற்கு ஊராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு ரேஷன் கார்டுகள் உள்ளன. ஆனால் இந்த ஊராட்சியில் ரேஷன் கடை கிடையாது. இதனால் பாதிபேர் கீரமங்கலத்தில் உள்ள ரேஷன் கடையிலும், மீதி பேர் வேம்பங்குடி கிழக்கு ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு வீண் அலைச்சல் மற்றும் நேரம் வீணாகி வருகிறது. மேலும் மாதம் ஒரு முறை மட்டுமே வேம்பங்குடி மேற்கு ஊராட்சிக்கு நேரில் வந்து ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே வேம்பங்குடி மேற்கு ஊராட்சியில் வாரம் ஒருநாள் வந்து ரேஷன் பொருட்கள் வழங்கவும், புதிய ரேஷன் கடை அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீரமுத்து அருணாச்சலம், கீரமங்கலம், புதுக்கோட்டை. 

பட்டுப்போன மரம் அகற்றப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகரம், கம்மங்காடு ரோடு மணிவிளான் 5-ம் தெருவில் அரசமரம் ஒன்று உள்ளது. இந்த மரம் பட்டுப்போய் எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் உள்ளது. மரம் முறிந்து விழுந்தால் உயிர் இழப்பு ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், வாகனங்களில் செல்வோர் மிகவும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பட்டுப்போன மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 பொதுமக்கள், அறந்தாங்கி, புதுக்கோட்டை.

Next Story