குமரி மாவட்டத்தில் 51 பேரூராட்சிகளில் உள்ள 828 வார்டுகளில் தேர்தல்


குமரி மாவட்டத்தில் 51 பேரூராட்சிகளில் உள்ள 828 வார்டுகளில் தேர்தல்
x
தினத்தந்தி 29 Jan 2022 5:14 PM GMT (Updated: 29 Jan 2022 5:14 PM GMT)

குமரி மாவட்டத்தில் 51 பேரூராட்சிகளில் உள்ள 828 வார்டுகளுக்கு தேர்தல் நடக்கிறது.

நாகர்கோவில்
குமரி மாவட்டத்தில் 51 பேரூராட்சிகளில் உள்ள 828 வார்டுகளுக்கு தேர்தல் நடக்கிறது.
கவுன்சிலர் தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 19-ந் தேதி நடைபெற உள்ளது. குமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் நாகர்கோவில் மாநகராட்சி, குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய 4 நகராட்சிகள், 51 பேருராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
மேயர், துணை மேயர், நகரசபை தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் ஆகியோருக்கான தேர்தல் மறைமுகமாக அதாவது தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்களால் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதனால் தற்போது வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் மட்டும் நடைபெற உள்ளது.
வார்டுகள் விவரம்
நாகர்கோவில் மாநகராட்சியைப் பொறுத்தவரையில் 52 வார்டுகளிலும், குளச்சல் நகராட்சியில் 24 வார்டுகளுக்கும், பத்மநாபபுரம் மற்றும் குழித்துறை நகராட்சிகளில் தலா 21 வார்டுகளிலும், கொல்லங்கோடு நகராட்சியில் 33வார்டுகளிலும் என மொத்தம் 151 வார்டுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. கொல்லங்கோடு புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளில் ஒன்றாகும். தற்போது குமரி மாவட்டத்தில் அதிக வார்டுகளைக் கொண்ட நகராட்சியாக கொல்லங்கோடு நகராட்சி விளங்குகிறது.
குமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 51 பேருராட்சிகளின் 828 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் 18 வார்டுகளைக் கொண்ட பேரூராட்சிகள் 21 உள்ளன. அதன் விவரம் வருமாறு:-
கன்னியாகுமரி
கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி, கல்லுக்கூட்டம், முளகுமூடு, வாழ்வச்சகோஷ்டம், கோதநல்லூர், திருவிதாங்கோடு, திற்பரப்பு, திருவட்டார், வேர்க்கிளம்பி, குலசேகரம், பளுகல், இடைகோடு, கடையால், பாகோடு, பாலப்பள்ளம், நல்லூர், கிள்ளியூர், கருங்கல், கீழ்குளம், உண்ணாமலைக்கடை ஆகிய 21 பேரூராட்சிகள் தலா 18 வார்டுகளைக் கொண்டதாகும்.
அகஸ்தீஸ்வரம், அஞ்சுகிராமம், அழகப்பபுரம், சுசீந்திரம், மயிலாடி, தென்தாமரைக்குளம், தேரூர், கொட்டாரம், மருங்கூர், தாழக்குடி, அழகியபாண்டியபுரம், பூதப்பாண்டி, புத்தளம், கணபதிபுரம், திங்கள்நகர், மண்டைக்காடு, வெள்ளிமலை, வில்லுக்குறி, மணவாளக்குறிச்சி, ரீத்தாபுரம், நெய்யூர், இரணியல், கப்பியறை, குமாரபுரம், விலவூர், ஆற்றூர், பொன்மனை, களியக்காவிளை, அருமனை, புதுக்கடை ஆகிய 30 பேரூராட்சிகள் தலா 15 வார்டுகளைக் கொண்டதாகும்.
1,324 வாக்குச்சாவடிகள்
இவ்வாறு 51 பேரூராட்சிகளில் 828 வார்டுகளில் கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றில் இட ஒதுக்கீடு அடிப்படையில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். 
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி, குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை, கொல்லங்கோடு நகராட்சிகள், 51 பேரூராட்சிகளில் உள்ள 979 வார்டுகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக 1,324 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் வருகிற 19-ந் தேதி 10 லட்சத்து 24 ஆயிரத்து 949 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

Next Story