மன்னார் வளைகுடா கடலோர பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு பணி


மன்னார் வளைகுடா கடலோர பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு பணி
x
தினத்தந்தி 29 Jan 2022 6:24 PM GMT (Updated: 29 Jan 2022 6:24 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் மன்னார் வளைகுடா கடலோர பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு பணியை கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் மன்னார் வளைகுடா கடலோர பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களிடையே பறவைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், பறவைகளின் வாழ்விடங்களை பாதுகாப்பதற்காகவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் மன்னார்வளைகுடா கடலோர பகுதிகளுக்கு உட்பட்ட முள்ளக்காடு, முயல் தீவு, ரோச் பூங்கா, பழையகாயல், மணப்பாடு, வேப்பலோடை, வேம்பார் உள்ளிட்ட இடங்களில் மும்பை இயற்கை மற்றும் வரலாற்று மைய விஞ்ஞானி பாலச்சந்திரன் தலைமையிலான குழுவினர் மற்றும் வனத்துறையினர், தன்னார்வலர்கள், பறவை ஆர்வலர்கள் 5 குழுக்களாக பிரிந்து நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகளை கடந்த 2 நாட்களாக மேற்கொண்டனர்.

முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்தாண்டு மாவட்டத்தில் நீர்வாழ் பறவைகள் அதிகமான அளவில் காணப்படுகின்றன. குறிப்பாக நாரைகள் ஆயிரக்கணக்கில் வந்துள்ளன. மேலும் பொன்நிற உப்பு கொத்தி, வெண்மார்பு உப்பு கொத்தி, அரிவாள் மூக்கு உல்லான், சின்னமூக்கு உல்லான், பேதை உல்லான், மஞ்சள்கொத்தி உல்லான், ஆத்து மண்கொத்தி, பச்சைக்கான் உல்லான், சங்கு வளை நாரை, கரண்டிவாயன், வெள்ளை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் பரவலாக காணப்படுகின்றன. இந்த பறவைகளின் எண்ணிக்கை தொடர்பான விவரம் கணக்கெடுப்பு முடிவில் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது மாவட்ட வன அலுவலர் அபிஷேக்டோமர், மற்றும் வனத்துறையினர், தன்னார்வலர்கள் உடனிருந்தனர்.

Next Story