வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் மேம்பாட்டுக்கான படிப்புகள் அறிமுகம்


வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் மேம்பாட்டுக்கான படிப்புகள் அறிமுகம்
x
தினத்தந்தி 29 Jan 2022 8:07 PM GMT (Updated: 29 Jan 2022 8:07 PM GMT)

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் மேம்பாட்டுக்கான படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று துணைவேந்தர் திருவள்ளுவன் கூறினார்.

தஞ்சாவூர்:
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் மேம்பாட்டுக்கான படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று துணைவேந்தர் திருவள்ளுவன் கூறினார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழக அரசின் நிதிநல்கையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் வளர் மையம் மற்றும் தமிழ்ப் பண்பாட்டு மையம் ஆகியவற்றுடன் வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னா சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளை நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் தமிழகத்தின் திருப்பூரில் இயங்கி வரும் சண்முகாலயா கலையிசை மன்றத்தில் பரதம் மற்றும் தமிழ் இசைப்பாடங்களில் நிலைப்படிப்புகளைப் பயில்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டன.
வெளிநாட்டு தமிழர்கள்
இந்நிகழ்வில் துணைவேந்தர் திருவள்ளுவன் கூறுகையில், ”தமிழ்ப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கத்தினை மேலும் முனைப்புடன் கொண்டு செல்லும் வகையிலான கல்வித்திட்டங்களை வகுத்து வருகின்றோம். தமிழக அரசின் முழுமையான ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டுதலுடன் தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஏற்ற புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருக்குறளில் மேலாண்மை, சன்மார்க்கம், பேசும்கலை, எழுதும்கலை, ஆளுமைத்திறன் மேம்பாடு, யோகக்கலை, தமிழ் இசை மற்றும் பரதம் உட்பட பல துறைகளில் சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகளை வழங்கப் பாடத்திட்டங்கள் ஆயத்தமாகி வருகிறது.
தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளில் இணையவழி மூலம் இப்படிப்புகள் நடத்தப்படும். இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் அயலகத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கை மேம்பாட்டிற்குத் துணைநிற்கும் வகையில் இப்பாடத்திட்டங்கள் அமைக்கப்படுகிறது.
இப்படிப்புகளில் சேரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கல்விநலத்துடன், மனவளமும் முன்னேற்றம் பெறும் அம்சங்களும் பாடத்திட்டத்தில் உள்ளது என்றார்.
இணைய வழி
பெட்னா அமைப்பின் செயலர் பாலா சுவாமிநாதன் இணையவழியாகப் பங்கேற்ற இந்நிகழ்வில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சங்கர், தமிழ்ப்பண்பாட்டு மைய இயக்குனர் தியாகராஜன், தமிழ் வளர் மைய இயக்குனர் குறிஞ்சிவேந்தன், இணைஇயக்குனர் கற்பகம், , பல்கலைக்கழக நல்கைத்திட்டங்கள் பிரிவின் துணைப் பதிவாளர் மல்லிகா மற்றும் சண்முகாலயா கலைமையத்தின் இயக்குனர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story