திருவேங்கடம் அருகே அரசு பஸ் மோதி ஆசிரியர் பலி


திருவேங்கடம் அருகே அரசு பஸ் மோதி ஆசிரியர் பலி
x
தினத்தந்தி 29 Jan 2022 8:32 PM GMT (Updated: 30 Jan 2022 5:02 AM GMT)

திருவேங்கடம் அருகே அரசு பஸ் மோதி ஆசிரியர் பலியானார்.

திருவேங்கடம்:

ஆசிரியர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா வதுவார்பட்டியை சேர்ந்தவர் மாயழகு மகன் ராமர் (வயது 35). இவர் சாத்தூர் அருகே ஏழாயிரம் பண்ணையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் ராமர் நேற்று முன்தினம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள உறவினர் வீட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் அங்கு இருந்து ஊருக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார்.

பஸ் மோதி பலி
மோட்டார் சைக்கிளில் திருவேங்கடம் அருகே பெருங்கோட்டூர் திருக்கோட்டி அய்யனார் கோவில் அருகே வளைவில் திரும்பும்போது, எதிரே மதுரையில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி அரசு பஸ் வந்தது.
அப்போது, கண் இமைக்கும் நேரத்தில் அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து உடனடியாக திருவேங்கடம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் கமலாதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பலியான ராமர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

டிரைவர் கைது
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, பஸ் டிரைவரான மதுரை மாவட்டம் பேரையூர் புதுத்தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரமூர்த்தி (42) என்பவரை கைது செய்தனர்.
விபத்தில் பலியான ராமருக்கு தமிழரசி (32) என்ற மனைவியும், தீபக்குமார் (9), ரதீஷ்குமார் (7) ஆகிய மகன்களும் உள்ளனர். தமிழரசி திருச்சியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று திரும்பியபோது அரசு பஸ் மோதி கணித ஆசிரியர் பலியான சம்பவம் பரிதாபத்ைத ஏற்படுத்தி உள்ளது.

Next Story