அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 15 பேருக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது


அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 15 பேருக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது
x
தினத்தந்தி 29 Jan 2022 8:37 PM GMT (Updated: 2022-01-30T02:07:42+05:30)

அரசு பள்ளி மாணவர்கள் 15 பேருக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது.

செங்கோட்டை:

மருத்துவ கலந்தாய்வு
மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஓமியோபதி ஆகிய படிப்புகளுக்கும், வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்பவருக்கும் நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான (எம்.பி.பி.எஸ்) ‘நீட்’ நுழைவுத்தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 12-ந் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர்.
அதன் முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கியது.

செங்கோட்டை பள்ளி மாணவிகள்
நேற்று 2-வது நாளாக அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். தென்காசி மாவட்டத்தில் இருந்து மொத்தம் 16 பேர் பங்கேற்றனர்.
இவர்களில் செங்கோட்டை எஸ்.ஆர்.எம்‌. அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த 5 மாணவிகளுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. மாணவி லோகேஸ்வரி என்பவருக்கு திருச்சி மருத்துவக் கல்லூரியிலும், சுபஸ்ரீக்கு ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியிலும், ஐஸ்வர்யாவுக்கு அரியலூர் மருத்துவ கல்லூரியிலும், பாத்திமா சைனியாவுக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியிலும், சவுதா அப்ரைன் என்ற மாணவிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.

பி.டி.எஸ். படிப்பு
அதே பள்ளியை சேர்ந்த மற்றொரு மாணவி சீதாதேவிக்கு வடக்கன்குளம் ராஜா பல் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ். படிக்க இடம் கிடைத்தது. மருத்துவ படிப்பில் இடம் கிடைத்த மாணவிகள் கூறுகையில், “தமிழக அரசு அறிவித்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் தான் எங்களது மருத்துவ கனவு நிறைவேறியது. இதற்கு கண்ணீர் மல்க தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், அரசு இந்த இட ஒதுக்கீட்டை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் எங்களை போல அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவர் கனவு நனவாகும்” என்றனர்.
தென்காசி- சங்கரன்கோவில்
தென்காசி அருகே உள்ள புல்லுக்காட்டு வலசை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவிகள் ரேவதி, சங்கீதா ஆகியோருக்கு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.
சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி மாலினிக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஐஸ்வர்யா என்ற மாணவிக்கு சென்னை பனிமலர் மருத்துவ கல்லூரியிலும், மாணவி முர்ஷிதா பானுவுக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரியிலும், சித்ராதேவி என்ற மாணவிக்கு கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.

நடுக்கல்லூர்
இதேபோல் நெல்லை அருகே உள்ள நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி திவ்யாவுக்கு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியிலும், விஷ்ணு பிரியாவுக்கு நீலகிரி அரசு மருத்துவ கல்லூரியிலும், மாணவர் உதயசெல்வத்திற்கு கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரியிலும் இடம் கிடைத்தது.
நெல்லை அருகே உள்ள மருதகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பானுப்பிரியாவுக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.
மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்த மாணவ-மாணவிகளை பள்ளித்தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினார்கள்.

Next Story