நாடோடி சமுதாய வாலிபரை மிரட்டியதாக பெண் தாசில்தார் மீது வன்கொடுமை வழக்கு


நாடோடி சமுதாய வாலிபரை மிரட்டியதாக பெண் தாசில்தார் மீது வன்கொடுமை வழக்கு
x
தினத்தந்தி 29 Jan 2022 8:58 PM GMT (Updated: 29 Jan 2022 8:58 PM GMT)

பெண் தாசில்தார் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

துமகூரு: துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி தாலுகாவில் உள்ளது கெடிகேஹள்ளி பாளையா. இந்த கிராமத்தில் 11 நடோடி குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் நாடோடி சமுதாயத்தை சேர்ந்த பரமேஸ் உள்பட சிலரின் குடிசை வீடுகள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 

 இதையடுத்து 11 குடும்பத்தினரும் அரசின் நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டனர். 14 நாட்களுக்கு பிறகு தாசில்தார் தேஜஸ்வினி அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறியுள்ளார். இதையடுத்து பரமேஸ் தனது குடும்பத்தினருடன் தாலுகா அலுவலகத்திற்கு சென்று தாசில்தார் தேஜஸ்வினியிடம் எங்களிடம் பணம் இல்லை. மீண்டும் குடிசை அமைக்க தாமதம் ஆகும். எனவே நிவாரண முகாமிலேயே தங்கியிருக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். 

அதை ஏற்க மறுத்த தாசில்தார், பரமேசையும், அவரது குடும்பத்தினரையும் தகாத வார்த்தையில் திட்டியதுடன், ரவுடி பட்டியலில் பெயரை சேர்த்துவிடுவதாகவும், ஆதார் அட்டையை கருப்பு பட்டியலில் இணைத்துவிடுவதாகவும் கூறியுள்ளார். மேலும் ஊழியர்களை வரவழைத்து பரமேஸ் மற்றும் குடும்பத்தினரை வெளியேற்ற உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து பரமேஸ், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 3-ந்தேதி சிக்கநாயக்கனஹள்ளி போலீசில் புகார் அளித்தார். 

ஆனால் போலீசார் இதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து பரமேஸ், எஸ்.சி., எஸ்.டி. ஆணையம், போலீஸ் ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் புகார் அளித்தார்.  இதையடுத்து போலீஸ் ஐ.ஜி. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்படி சிக்கநாயக்கனஹள்ளி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் தற்போது போலீசார் தாசில்தார் தேஜஸ்வினி மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story
  • chat