6 மகன்களும் கைவிட்டதால் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை காப்பாற்றிய போலீசார்


6 மகன்களும் கைவிட்டதால் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை காப்பாற்றிய போலீசார்
x
தினத்தந்தி 30 Jan 2022 9:56 AM GMT (Updated: 30 Jan 2022 9:56 AM GMT)

6 மகன்களும் கைவிட்டதால் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை காப்பாற்றிய போலீசார் அறிவுரை கூறி மூதாட்டியை அவரது மகனுடன் அனுப்பி வைத்தனர்.

திருவொற்றியூர் மேட்டுத்தெருவில் வசித்து வருபவர் ஜானகி அம்மாள் (வயது 70). கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளியான இவர், தற்கொலை செய்யும் எண்ணத்தோடு திருவொற்றியூர் டோல்கேட் அருகே உள்ள கடற்கரைக்கு ஊனமுற்றோருக்கான சக்கர நாற்காலியில் தனியாக வந்தார். கடற்கரையோரம் துறைமுகத்துக்கு கன்டெய்னர் லாரிகள் செல்லும் சாலையை ஒட்டி நின்றுகொண்டிருந்த மூதாட்டியிடம், புதுவண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குருசேவ் மற்றும் போலீசார் விசாரித்தனர்.

அப்போது மூதாட்டி ஜானகி அம்மாள், “எனது கணவர் குஞ்சுபாதம் துறைமுகத்தில் வேலை பார்த்து இறந்துவிட்டார். எனக்கு சொந்தமாக வீடு உள்ளது. எனக்கு 6 மகன்கள் உள்ளனர். 6 பேரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். நான் வீட்டின் ஒரு பகுதியில் அரசு தரும் ஊனமுற்றோர் உதவித்தொகையில் தனியாக சமைத்து சாப்பிட்டு வருகிறேன். 6 மகன்களும் என்னை கண்டுகொள்ளாமல் கைவிட்டதால் விரக்தியில் கடலில் குதித்து தற்கொலை செய்யும் எண்ணத்தில் வீட்டில் இருந்து கடற்கரைக்கு வந்ததாக” கண்ணீர்மல்க கூறினார்.

மேலும் இதற்காக தனது மகன்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் கண்கலங்கியபடி கூறினார். இதையடுத்து போக்குவரத்து போலீசார், திருவொற்றியூர் சட்டம்-ஒழுங்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து மூதாட்டியை மீட்டு அவரது மகன்களுக்கு தகவல் கொடுத்தனர். அவரது மகன்களில் ஒருவர் அங்கு வந்தார். அவருக்கு போலீசார் அறிவுரை கூறி மூதாட்டியை அவருடன் அனுப்பி வைத்தனர்.


Next Story
  • chat