ஆசிரியையிடம் சங்கிலி பறித்த வழக்கில் பிரபல கொள்ளையர்கள் 2 பேர் கைது


ஆசிரியையிடம் சங்கிலி பறித்த வழக்கில் பிரபல கொள்ளையர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 Jan 2022 4:44 PM GMT (Updated: 30 Jan 2022 4:44 PM GMT)

திருபுவனை அருகே ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறித்த 2 கொள்ளையர்களை சேலத்தில் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

திருபுவனை, ஜன.
திருபுவனை அருகே ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறித்த 2 கொள்ளையர்களை சேலத்தில் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
தங்க சங்கிலி பறிப்பு
திருபுவனை அருகே உள்ள திருபுவனைபாளையம், ஜெயநகரை சேர்ந்தவர் அமுதா (வயது 58). மதகடிப்பட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார். கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி பள்ளிக்கூடத்தில் இருந்து தன்னுடன் வேலை பார்க்கும் ஆசிரியை லாவண்யாவுடன் (35) திருபுவனை கடைத்தெரு வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென்று லாவண்யா கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். 
சுதாரித்துக்கொண்ட அவர் சங்கிலியை கைகளால் கெட்டியாக பிடித்துக்கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அமுதா, மர்மநபர்களை தடுக்க முயன்றார். அப்போது, மர்மநபர்கள் அமுதா அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை    பறித்துக்கொண்டு, அவரை   கீழே தள்ளிவிட்டு   மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர்.
கண்காணிப்பு கேமரா
இது குறித்து திருபுவனை போலீஸ் நிலையத்தில் அமுதா புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் குமாரவேலு, அஜய் குமார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் வீரபாலு, பார்த்தசாரதி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வந்தனர். 
கடைவீதியில் பொருத்தப்பட்டுள்ள  கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, நகை பறித்தவர்களின் உருவம் அதில் பதிவாகி இருந்தது. இதை துருப்புச் சீட்டாக வைத்து போலீசார் மர்ம நபர்கள்    குறித்து  தீவிரமாக விசாரித்தனர். 
சேலத்தில் 2 பேர் கைது
அப்போது  அவர்கள் சேலம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே திருபுவனை போலீசார் சேலம் பூந்தோட்டம் பகுதியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் 2 பேரை சுற்றி வளைத்தனர். விசாரணையில் அவர்களில் ஒருவர் மதுரை விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் கருப்புசாமி (22), மற்றொருவர் சென்னை ராஜாஜி நகரை சேர்ந்த தனசேகரன் மகன் சசிகுமார் (20) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து திருபுவனை போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணைக்கு பின் அவர்கள் 2 பேரும் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து தங்க சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. குற்றவாளிகள் 2 பேர் 5 மாதத்திற்கு பிறகு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
40-க்கும் மேற்பட்ட வழக்குகள்
போலீசாரிடம் சிக்கிய கருப்பசாமி, சசிகுமார் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40-க்கும் மேற்பட்ட வழிப்பறி உள்ளிட்ட  பல்வேறு வழக்குகள் இருப்பது போலீசாரின்   விசாரணையில்       தெரிய வந்துள்ளது.

Next Story