இலுப்பூரில் பா.ஜனதாவினர் சாலை மறியல்-பெண்கள் உள்பட 79 பேர் கைது


இலுப்பூரில் பா.ஜனதாவினர் சாலை மறியல்-பெண்கள் உள்பட 79 பேர் கைது
x
தினத்தந்தி 30 Jan 2022 7:23 PM GMT (Updated: 30 Jan 2022 7:23 PM GMT)

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கைது செய்யப்பட்டதை கண்டித்து இலுப்பூரில் பா.ஜனதாவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, பெண்கள் உள்பட 79 பேரை போலீசார் கைது செய்தனர்.

அன்னவாசல், 
மதமாற்றம் செய்வதாக புகார்
இலுப்பூர் அருகே உள்ள திம்மம்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டுக்கு சமாதானபுரத்தை சேர்ந்த 2 கிறிஸ்தவ பெண்கள் கடந்த 21-ந் தேதி சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் 2 பேரும் அந்த பெண்ணின் குடும்பத்தினரை மதமாற்றம் செய்ய முயன்றதாக கூறி ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் மக்கள் தொடர்பாளரான திம்மம்பட்டியை சேர்ந்த கணேஷ் பாபு (வயது 38) மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த சிலர், அந்த பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், தங்களை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறித்து கொண்டதாக இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண்கள் புகார் அளித்தனர். 
போலீஸ் நிலையம் முற்றுகை
இதன் பேரில் பெண் வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட 4 சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு, நேற்று முன்தினம் நள்ளிரவில் கணேஷ் பாபுவை கைது செய்தனர். இதைக்கண்டித்து இலுப்பூர் போலீஸ் நிலையம் எதிரே பா.ஜனதாவினர் நேற்று முன்தினம் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் 1 மணி நேரத்துக்கு பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்தநிலையில் நேற்று இலுப்பூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
79 பேர் கைது
இதையடுத்து, அவர்களிடம் அன்னவாசல் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக பஸ் நிலையம் செல்ல முயன்றனர். இலுப்பூர் பேரூராட்சி அலுவலகம் அருகே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அதிருப்தி அடைந்த பா.ஜனதாவினர் புதுக்கோட்டை-இலுப்பூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 31 பெண்கள் உள்பட 79 பேரை போலீசார் கைது செய்து இலுப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story