வாகன கடனை கேட்டு திட்டியதால் நடுரோட்டில் ஜீப்பை தீவைத்து எரித்த உரிமையாளர்


வாகன கடனை கேட்டு திட்டியதால் நடுரோட்டில் ஜீப்பை தீவைத்து எரித்த உரிமையாளர்
x
தினத்தந்தி 30 Jan 2022 8:10 PM GMT (Updated: 30 Jan 2022 8:10 PM GMT)

வாகன கடனை கேட்டு தனியார் நிதி நிறுவன ஊழியர் அவதூறாக திட்டியதால், நடுரோட்டில் ஜீப்பை அதன் உரிமையாளர் தீ வைத்து எரித்த சம்பவம் கொப்பலில் நடந்து உள்ளது.

கொப்பல்:
  
வாகன கடன்

  கொப்பலை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரா. இவர் கொப்பல் டவுனில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து வாகன கடன் பெற்று ஜீப் ஒன்றை வாங்கி இருந்தார். மேலும் அந்த ஜீப்பில் பயணிகளை ஏற்றி செல்ல சுபாஷ் சந்திரா பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக சுபாஷ் சந்திராவுக்கு வருமானம் குறைந்தது.

  இதனால் வாகன கடனை சுபாஷ் சந்திராவால் செலுத்த முடியவில்லை. ஆனாலும் கடனை திரும்ப செலுத்தும்படி தனியார் நிதி நிறுவனத்தினர் சுபாஷ் சந்திராவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று கொப்பல் பஸ் நிலைய பகுதியில் சுபாஷ் சந்திரா, ஜீப்புடன் நின்று கொண்டு இருந்தார்.

ஜீப்புக்கு தீ வைப்பு

  அப்போது அங்கு வந்த நிதி நிறுவன ஊழியர் வாகன கடனை கேட்டு சுபாஷ் சந்திராவுடன் தகராறு செய்ததுடன் அவதூறாக திட்டியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த சுபாஷ் சந்திரா அப்பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு சென்று பெட்ரோல் வாங்கி வந்து ஜீப்பின் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் ஜீப் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

  இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து ஜீப்பில் பிடித்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். ஆனாலும் ஜீப் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுபற்றி அறிந்த கொப்பல் டவுன் போலீசார் அங்கு வந்து சுபாஷ் சந்திராவிடம் விசாரித்தனர். அப்போது தனியார் நிதி நிறுவன ஊழியர் கடன் விவகாரத்தில் அவதூறாக பேசியதால் ஜீப்பை சுபாஷ் சந்திரா தீவைத்து எரித்தது தெரியவந்தது. இந்த சம்பவம் கொப்பலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story