நெல்லையில் தி.மு.க. வட்ட செயலாளர் கொலை: கொலையாளிகளை பிடிக்க தனிப்படை கேரளா விரைந்தது 2 பேரிடம் போலீசார் விசாரணை


நெல்லையில் தி.மு.க. வட்ட செயலாளர் கொலை: கொலையாளிகளை பிடிக்க  தனிப்படை கேரளா விரைந்தது 2 பேரிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 Jan 2022 8:59 PM GMT (Updated: 30 Jan 2022 8:59 PM GMT)

தி.மு.க. வட்ட செயலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை கேரளா விரைந்தது

நெல்லை:
நெல்லையில் தி.மு.க. வட்ட செயலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை கேரளா விரைந்தது. 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வட்ட செயலாளர் கொலை
நெல்லை பாளையங்கோட்டை யாதவர் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து மகன் பொன்னுதாஸ் என்ற அபே மணி (வயது 33). இவர் 35-வது வார்டு தி.மு.க. வட்ட செயலாளராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அபே மணி பாளையங்கோட்டை போலீஸ் நிலையம் அருகே உள்ள தனது வீட்டின் முன்பு நின்று சிலருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் அபே மணியை வெட்டிக் கொலை செய்து விட்டு, காரில் தப்பிச் சென்றுவிட்டது.
காரணம் என்ன?
இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, அபே மணி சமீபத்தில் டாஸ்மாக் பார் ஏலம் எடுத்து இருந்தார். மேலும் அவரது தாயார் 35-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார்.
இதுதொடர்பான முன்விரோதத்தில் அபே மணி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனினும் வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
6 தனிப்படைகள்
இதற்கிடையே கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகளை அமைத்து மாநகர போலீஸ் கமிஷனர் துரைக்குமார் உத்தரவிட்டார். இந்த தனிப்படை போலீசார், கொலையாளிகள் பயணம் செய்த கார் குறித்து விசாரித்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். 
அதில் கொலையாளிகள் பயன்படுத்திய கார் பாளையங்கோட்டை முருகன்குறிச்சி, வண்ணார்பேட்டை, நெல்லை சந்திப்பு, டவுன், பழையபேட்டை வழியாக தென்காசி ரோட்டில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் கொலையாளிகள் தென்காசி வழியாக கேரளாவுக்கு தப்பிச்சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் ஒரு தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்து உள்ளனர். இதுதவிர கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் உறவினர்கள் வசிக்கும் ஊர்களுக்கும் தனிப்படையினர் தேடி சென்றுள்ளனர்.
2 பேரை பிடித்து விசாரணை
இதற்கிடையே டாஸ்மாக் பார் ஏலம் தொடர்புடையவர்கள் மற்றும் அந்த வார்டில் போட்டியிட முயற்சி செய்தவர்களையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொலை தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
கொலை செய்யப்பட்ட அபே மணி வீட்டுக்கு, நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
உடலை வாங்க மறுப்பு
இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட அபே மணி உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் இதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் மாநகர மேற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அபே மணி உடல் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர்.
கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். இறந்தவரின் குடும்பத்துக்கு அரசு வேலை, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இந்த சம்பவத்தால் பாளையங்கோட்டை தெற்கு பஜார், உச்சிமாகாளி அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


Next Story