ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர் வீட்டில் வெள்ளி குத்துவிளக்குகள்- பணம் திருட்டு


ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர் வீட்டில் வெள்ளி குத்துவிளக்குகள்- பணம் திருட்டு
x
தினத்தந்தி 30 Jan 2022 9:01 PM GMT (Updated: 30 Jan 2022 9:01 PM GMT)

ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர் வீட்டில் வெள்ளி குத்துவிளக்குகள்- பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

மீன்சுருட்டி:

திருட்டு
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி மெயின்ரோடு தெருவை சேர்ந்தவர் சிவகுருநாதன்(வயது 69). இவர் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு, தனது மனைவியின் மருத்துவ பரிசோதனைக்காக தஞ்சாவூருக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் ஜன்னல் கதவு மற்றும் பின்பக்க கதவின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அந்த வீட்டின் மாடியில் உள்ள ஜெயா என்பவர் சத்தம் கேட்டு வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் இருப்பதை கண்டு கூச்சலிட்டதால் உஷாரான மர்ம நபர்கள் வீட்டின் பூஜை அறையில் இருந்த 5 வெள்ளி குத்துவிளக்குகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை திருடிக்கொண்டு பின்பக்க வாசல் வழியாக தப்பி ஓடிவிட்டனர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகள்
பின்னர் இதுகுறித்து மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் சிவகுருநாதன் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்வையிட்டனர். மேலும் அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டது. மோப்ப நாய் மூலம் துப்பு துலக்கப்பட்டது. மேலும் இது குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்கள் தப்பி ஓடியது பதிவாகியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் திருட்டு போவது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story