புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 30 Jan 2022 9:15 PM GMT (Updated: 30 Jan 2022 9:15 PM GMT)

புகார் பெட்டி

சுகாதாரம் பாதிப்பு

வெள்ளோடு அருகே உள்ள முகாசிபுலவன்பாளையம் வாய்க்கால் மேட்டில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து கடைகளின் குப்பைகள், இறைச்சி கடைகள் இங்கு கொண்டுவந்து போடப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் சுற்றுப்புற சுகாதாரம் கெட்டுவிட்டது. எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் முகாசிபுலவன்பாளையம் வாய்க்கால் மேட்டில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுப்பார்களா?

  பொதுமக்கள், முகாசிபுலவன்பாளையம்.

ஆபத்தான குழி

  கொடுமுடி பஸ் நிலையம் அருகில் கரூர் செல்லும் ரோட்டில் பெரிய குழி ஏற்பட்டு உள்ளது. கடந்த ஒரு மாதமாக இந்த குழி சரிசெய்யப்படாமல் இருக்கிறது. இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் இந்த குழியில் இறங்கி தடுமாறி கீழே விழுகிறார்கள். வாகன ஓட்டிகளின் நலன் கருதி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், கொடுமுடி பஸ்நிலையம் அருகே உள்ள இந்த ஆபத்தான குழியை மூடுவார்களா?
  சரவணன், கொடுமுடி.

கழிப்பறை வசதி

  பவானி அருகே உள்ள தொட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்காடையம்பட்டியில் ஆண்களுக்கான கழிப்பறை வசதி இல்லை. இதனால் பொது இடங்களையே ஆண்கள் கழிப்பிடமாக பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக அந்த பகுதியில் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தொட்டிபாளையம் ஊராட்சி நிர்வாகம் புதுக்காடையம்பட்டியில் ஆண்களுக்கான கழிப்பறை கட்டிக்கொடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், புதுக்காடையம்பட்டி.

வீணாகும் குடிநீர் 

  கொடுமுடி ஒத்தக்கடையில் உள்ள முத்தூர் ரோட்டில், கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 2 நாட்களாக குடிநீர் வீணாக ரோட்டில் செல்கிறது. இதனால் அந்த இடத்தில் ரோடும் பழுதடைந்துவிட்டது. எனவே தண்ணீர் வீணாவதை தடுக்க உடனே பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்யவேண்டும்.
  பொதுமக்கள், ஒத்தக்கடை
  
ஆபத்தான மரக்கிளை

  ஆப்பக்கூடல் அடுத்து உள்ள புதுப்பாளையம் சுடுகாட்டில் பழமையான ஆலமரம் உள்ளது. இந்த மரத்தின் கிளைகள் பட்டுப்போய் எந்த நேரத்திலும் உடைந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்டுப்போன ஆலமரத்தின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.
  ஆப்பக்கூடல் புதுப்பாளையம், பொதுமக்கள்.
  
தேங்கி நிற்கும் சாக்கடை

  அத்தாணி இருந்து பவானி செல்லும் சாலையில் வாரச்சந்தை அருகே சாக்கடை நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒரு வித துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி தேங்கி நிற்கும் சாக்கடை நீரை அப்புறப்படுத்த ஆவன வேண்டும்.
  பூபதி, அத்தாணி.
  
இடையூறாக மின்கம்பம்

  கோபி மொடச்சூர் சாலையில் இருந்து பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் வழியில் 19-வது வார்டு உள்ளது. இங்கு போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் ஒன்று உள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர்கள் மின்கம்பம் மீது மோதி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பெரும் விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் கம்பத்தை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், கோபி.
  
  


Next Story