ஆசனூர் அருகே குட்டியுடன் சாலையை கடந்த யானைகள்- வாகன ஓட்டிகள் மெதுவாக செல்ல வனத்துறை எச்சரிக்கை


ஆசனூர் அருகே குட்டியுடன் சாலையை கடந்த யானைகள்- வாகன ஓட்டிகள் மெதுவாக செல்ல வனத்துறை எச்சரிக்கை
x

ஆசனூர் அருகே குட்டியுடன் யானைகள் சாலையை கடந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தாளவாடி
ஆசனூர் அருகே குட்டியுடன் யானைகள் சாலையை கடந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வாகன போக்குவரத்து
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் சத்தியமங்கலம், ஆசனூர், கேர்மாளம், ஜீர்கள்ளி, தாளவாடி உள்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதனால் வாகன போக்குவரத்து எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். 
குட்டிகளுடன் யானைகள்
மேலும் வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் உணவை தேடி அடிக்கடி சாலையை கடந்து செல்கின்றன.  இந்நிலையில் நேற்று காலை ஆசனூர் அருகே வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் யானைகள் வெளியேறின. பின்னர் யானைகள் ரோட்டில் வந்து நின்று கொண்டு அங்கும் இங்கும் உலாவின. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை சற்று தூரத்திலே நிறுத்தி கொண்டனர். பின்னர் யானைகள் சிறிது நேரம் கழித்து தானாகவே வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே வாகனங்கள் சென்றன. 
எச்சரிக்கை
இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில், ‘வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வருகிறது. அவ்வாறு வரும் யானைகள் சாலையின் நடுவில் வந்து நின்று கொள்கின்றன. இதனால் அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் மிகவும் கவனமுடனும், மெதுவாகவும் வரவேண்டும். மேலும் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலிகளை ஏற்படுத்தக்கூடாது. வாகனங்களை வனப்பகுதியில் நிறுத்திவிட்டு செல்போனில் வனவிலங்குகளை படம் பிடிக்க கூடாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். 

Next Story
  • chat