‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 30 Jan 2022 10:13 PM GMT (Updated: 30 Jan 2022 10:13 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குப்பைகளை எரிக்க கூடாது

கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்தலப்பள்ளியில் அங்கன்வாடி மையம் அருகில் அந்த பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி எரிக்கின்றனர். இதனால் குழந்தைகளுக்கு சுவாச கோளாறு பிரச்சினை ஏற்படுகிறது. எனவே குப்பைகளை எரிக்காமல் அள்ளி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், பெத்தலப்பள்ளி, கிருஷ்ணகிரி.

சேலம் மாநகராட்சி 38-வது வார்டு தியாகி நடேசன் 1-வது தெருவில் 15 நாட்களாகியும் குப்பைகள் அள்ளப்படவில்லை. இதனால் குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க செய்யவேண்டும்.
-ர.பாலசுப்ரமணியம், அம்மாபேட்டை, சேலம்.
===
பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறு

தர்மபுரி மாவட்டம் வெங்கடசமுத்திரம் ஊராட்சி 5-வது வார்டு சக்தி நகரில் 2020- 21-ம் ஆண்டில் ஆழ்துளை கிணற்றுக்கு மின் மோட்டார் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரை மின்மோட்டார் அமைக்கப்படவில்லை. இதனால் ஆழ்துளை கிணறு சேதமடைந்து காணப்படுகிறது. எனவே அதிகாரிகள் சேதமடைந்த ஆழ்துளை கிணற்றை சீரமைத்து மின்மோட்டார் மூலம் அப்பகுதி மக்களுக்கு  குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜயா, வெங்கடசமுத்திரம், தர்மபுரி.
==
தாழ்வாக தொங்கும் மின்வயர்கள்

நாமக்கல் பிரதான சாலையில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இதன் எதிரே பழைய முன்சீப் கோர்ட்டு தெரு உள்ளது. இந்த தெருவில் மின்சார வயர்கள் மிகவும் தாழ்வாக தொங்கியபடி செல்கின்றனர். இவை வாகனங்களில் செல்வோர் மீது எதிர்பாராதவிதமாக பட்டால், பெரிய அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே மின்விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் முன்பு தாழ்வாக தொங்கும் மின்வயர்களை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், நாமக்கல்.
===
பழமையான கட்டிடம்

சேலம் மாவட்டம் ஓ.செளதாபுரம் ஊராட்சி அறமத்தாபாளையம் கிராமத்தில் அரசு கட்டிடம் ஒன்று வானொலி ஒலிபரப்பு நிலையமாகவும், தொலைக்காட்சி நிலையமாகவும் மக்களின் பயன்பாட்டில் இருந்தது. இந்த கட்டிடம் சேதமடைந்து தற்போது பயன்பாடு இல்லாமல் கிடக்கிறது. எனவே இந்த கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த அரசு கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், அறமத்தாபாளையம், சேலம்.
===
குண்டும், குழியுமான சாலை

சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சி அலுவலகம் பின்புறம் விநாயகர் கோவில் ரோடு குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை புதுப்பித்து தர வேண்டும்.
-ஊர்மக்கள், மேட்டூர், சேலம்.
===
ரேஷன் கடை அமைக்கப்படுமா?

 சேலம் மாவட்டம் எருமாபாளையம் ஊராட்சியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதனால் பொருட்கள் கிடைக்க காலதாமதம் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி அதே பகுதியில் மற்றொரு ரேஷன் கடை அமைத்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கருணாநிதி, எருமாபாளையம், சேலம்.
===
நோய் பரவும் அபாயம்

சேலம் மாவட்டம் கொளத்தூர் பண்ணவாடி ரோடு காட்டுவளவு தெரு பகுதியில் நீண்டகாலமாக சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதுபற்றி பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதனால் சாக்கடை நீரில் புழுக்களும், கொசுக்களும் அதிகமாக இருப்பதால் மக்கள் நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மு.பிரசாந்த், கொளத்தூர், சேலம்.

சேலம் அரிசிபாளையம்  27-வது வார்டு சின்னப்பன்தெரு காரைசந்து தெருவில் கழிவு நீர் செல்வதற்கு சாக்கடை கால்வாய் இல்லாததால் தெருவில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்த பகுதியில்  சாக்கடை கால்வாய் அமைத்து தர மாநகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-ஊர்மக்கள், அரிசிபாளையம், சேலம்.
==

Next Story