சென்னை மாநகராட்சி தேர்தல்: 27 ஆயிரத்து 812 பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு தொடக்கம்


சென்னை மாநகராட்சி தேர்தல்: 27 ஆயிரத்து 812 பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு தொடக்கம்
x
தினத்தந்தி 31 Jan 2022 9:58 AM GMT (Updated: 2022-01-31T15:28:50+05:30)

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்கும் பணி இன்று முதல் தொடங்க உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 200 வார்டுகளுக்கான தேர்தலை வெற்றியுடன் நடத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, முறையான ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்கும் பணி இன்று முதல் தொடங்க உள்ளது.

அந்தவகையில் பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தல் பணியில் ஈடுபட மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட 27 ஆயிரத்து 812 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு, அதுகுறித்த தகவல்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 24 மையங்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

இந்த முதற்கட்ட பயிற்சி வகுப்பில் மிண்ணனு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்படும். இன்று நடைபெறும் பயிற்சி வகுப்பில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.


Next Story