கொரோனா நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று சிகிச்சை


கொரோனா நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று சிகிச்சை
x
தினத்தந்தி 31 Jan 2022 1:08 PM GMT (Updated: 31 Jan 2022 1:08 PM GMT)

தனிமையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.

ஊட்டி

தனிமையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.

வீட்டு தனிமை

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 470 பேருக்கு மேல் கொரோனா உறுதியானது. பின்னர் படிப்படியாக குறைந்து நேற்று முன்தினம் 210 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. தொற்று குறைந்ததால் வீட்டு தனிமையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. 

லேசான அறிகுறிகள் அல்லது அறிகுறிகள் இன்றி கொரோனா உறுதியான நபர்கள் 7 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும். அவர்கள் தனி அறையில் கண்காணிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சுகாதார குழுவினர் தினமும் தொடர்பு கொண்டு தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகின்றனர். 

முழு பாதுகாப்பு கவச உடை

இந்த நிலையில் தொற்று பரவலை தடுக்க ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய வட்டாரங்களில் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரடியாக சந்தித்து சுகாதார பணியாளர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

நீலகிரியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு 1,413 பேர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது 1,164 பேர் வீட்டு தனிமையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை வீடு தேடி சென்று உடல்நிலையை பரிசோதித்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

15 சதவீதமாக குறைவு

தடுப்பூசி 2 போஸ் செலுத்தியவர்களுக்கு தொற்று பாதித்தாலும் அதிக பாதிப்பு இல்லை. தற்போது தகுதி வாய்ந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

ஒரே பகுதியில் 3 பேருக்கு தொற்று பாதித்தால், அந்த பகுதி தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் 91 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது 4 வட்டாரங்களில் மொத்தம் 55 இடங்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பரவல் 15 சதவீதமாக குறைந்து உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story