கொரோனா நோயாளிகள் வாக்களிக்க 1 மணி நேரம் ஒதுக்க வேண்டும்


கொரோனா நோயாளிகள் வாக்களிக்க 1 மணி நேரம் ஒதுக்க வேண்டும்
x
தினத்தந்தி 31 Jan 2022 1:08 PM GMT (Updated: 31 Jan 2022 1:08 PM GMT)

கொரோனா நோயாளிகள் வாக்களிக்க 1 மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்று முதற்கட்ட பயிற்சி முகாமில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

ஊட்டி

கொரோனா நோயாளிகள் வாக்களிக்க 1 மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்று முதற்கட்ட பயிற்சி முகாமில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

பயிற்சி முகாம்

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி 4 நகராட்சிகளில் 208 வாக்குச்சாவடிகள், 11 பேரூராட்சிகளில் 201 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 409 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. 

இந்த வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபட நகராட்சிகள், பேரூராட்சிகள் வாரியாக 1,964 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் ஊட்டி நகராட்சியில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி முகாம், தனியார் பள்ளியில் நடந்தது. பயிற்சி முகாமை நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆணையாளருமான காந்திராஜ் தொடங்கி வைத்தார்.

அழியாத மை

தேர்தல் பணிக்கு ஊட்டி நகராட்சியில் 8 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 396 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, 8 பிரிவாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு மண்டல அலுவலர்கள் பயிற்சி அளித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்படும் வாக்குச்சாவடிகளை வாக்காளர்கள் வாக்களிக்க தயார்படுத்த வேண்டும். 

முதலில் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா? என்று சரிபார்ப்பதோடு, ஆதார் அடையாள அட்டை, வாகன ஓட்டுனர் உரிமம் உள்பட 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை சரிபார்த்து பதிவேட்டில் குறிக்க வேண்டும். விரலில் அழியாத மை வைக்க வேண்டும். வாக்காளர்கள் வாக்களிப்பது மற்றவர்களுக்கு தெரியாத வகையில் மறைவு அட்டை வைக்க வேண்டும். வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் சரியாக இயங்குகிறதா? என்று வாக்குப்பதிவுக்கு முன்பு சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். 

வருகை பதிவேடு

பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வரும்போது அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். கொரோனா நோயாளிகள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
வாக்குப்பதிவுக்கு பின்பு வாக்குப்பதிவு எந்திரங்களை சீல் வைத்து மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

முன்னதாக பயிற்சிக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் எத்தனை பேர் வந்தனர் என்று வருகை பதிவேடு சரிபார்க்கப்பட்டது. கோத்தகிரி பேரூராட்சியில் 27 வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி முகாம், கோத்தகிரி புயல் நிவாரண கூட அரங்கில் நேற்று நடைபெற்றது. இதேபோல பிற நகராட்சி, பேரூராட்சிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தனித்தனியாக முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.


Next Story