நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 31 Jan 2022 1:16 PM GMT (Updated: 31 Jan 2022 1:16 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் 19 இடங்களில் தேர்தல் பணியாளர்களுக்கு முதல் கட்ட பயிற்சி நேற்று நடந்தது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 19 இடங்களில் தேர்தல் பணியாளர்களுக்கு முதல் கட்ட பயிற்சி நேற்று நடந்தது. தூத்துக்குடியில் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ பயிற்சி அளித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 18 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தல் பணிக்காக 5 ஆயிரத்து 688 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு சுழற்சி முறையில் எந்தெந்த உள்ளாட்சிகளில் பணியாற்ற வேண்டும் என்று பணியிட ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து அந்த தேர்தல் பணியாளர்களுக்கான முதல் கட்ட பயிற்சி அந்தந்த உள்ளாட்சிகளில் நடந்தன. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 19 இடங்களில் தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி நடந்தது.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 319 வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்காக 1000 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி நேற்று தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் நடந்தது. பயிற்சியை மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார். முதன்மை பயிற்சியாளர் அரிகணேஷ், தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தார். வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குப்பதிவுக்கு தயார் செய்வது குறித்து செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்து..
பயிற்சியில் மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆணையாளருமான சாருஸ்ரீ பேசும் போது, நீங்கள் பல்வேறு தேர்தல்களில் பணியாற்றி அனுபம் மிக்கவர்கள். 10 நாட்களாக அனைவரும் தேர்தல் பணியாற்றினாலும் ஓட்டுப்பதிவு அமைதியாக நல்ல முறையில் நடப்பதுதான் முக்கியம். நீங்கள்தான் ஓட்டுப்பதிவின் போது எந்த பிரச்சினையும் ஏற்படாமல், சிறப்பாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் சில மாற்றங்கள் மட்டுமே இருக்கும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இயக்குவதை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். இந்த தேர்தலில் வாக்குப்பதிவை காண்பிக்கும் எந்திரம் கிடையாது. அது பற்றி வாக்காளர்கள் கேட்டால், அவர்களுக்கு உரிய விளக்கங்களை தர தயாராக இருக்க வேண்டும். வாக்குச்சாவடியில் பணியாற்றும் 4 பேரும் ஒருங்கிணைந்த பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.
பயிற்சியில், மாநகராட்சி உதவி பொறியாளர் பிரின்ஸ் மற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story