ஈரோடு பெண்ணிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.4 லட்சம் மீட்பு


ஈரோடு பெண்ணிடம் மோசடி செய்யப்பட்ட  ரூ.4 லட்சம் மீட்பு
x
தினத்தந்தி 31 Jan 2022 2:16 PM GMT (Updated: 31 Jan 2022 2:16 PM GMT)

தூத்துக்குடியில் அரசு வேலை வாங்கி தருவதாக ஈரோடு பெண்ணிடம் மோசடி செய்யப்பட்ட ரூ 4 லட்சம் பணத்தை சைபர் குற்றப்பிரிவு போலீசார் மீட்டனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் அரசு வேலை வாங்கி தருவதாக ஈரோடு பெண்ணிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.4 லட்சம் பணத்தை சைபர் குற்றப்பிரிவு போலீசார் மீட்டனர்.
பணம் மோசடி
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் சசிக்குமார். இவருடைய மனைவி நந்தினி. இவர் அரசு ஆஸ்பத்திரியில் நர்சு வேலை பெறுவதற்காக, தூத்துக்குடியை சேர்ந்த கருணாமூர்த்தி என்பவர் மூலம், ஆறுமுகநேரி பலவேசம் மகன் பெருமாள் என்பருக்கு ரூ.4 லட்சம் பணம் கொடுத்து உள்ளார். இந்த நிலையில் நந்தினிக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் நந்தினி பணத்தை திருப்பி கேட்டு உள்ளார். ஆனால் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. எனவே, தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த நந்தினி இதுபற்றி, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் புகார் அளித்தார்.
ஒப்படைப்பு
அதன்பேரில் சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பெருமாள், மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இதனால் மோசடி செய்த ரூ.4 லட்சத்துக்கான காசோலையை போலீசில் பெருமாள் ஒப்படைத்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் ஈரோட்டில் இருந்து நந்தினி வரவழைக்கப்பட்டார். அவரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மீட்கப்பட்ட ரூ.4 லட்சத்துக்கான காசோலையை ஒப்படைத்தார்.

Next Story