பழனி முருகன் கோவிலில் குவிந்த பாதயாத்திரை பக்தர்கள்


பழனி முருகன் கோவிலில் குவிந்த பாதயாத்திரை பக்தர்கள்
x
தினத்தந்தி 31 Jan 2022 2:17 PM GMT (Updated: 31 Jan 2022 2:17 PM GMT)

தைப்பூச திருவிழா முடிந்த பிறகும், பழனி முருகன் கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்.

பழனி:

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் வருகை தருகின்றனர். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நிகழ்ச்சிகள் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி நடந்தது. 

அதேவேளையில் பாதயாத்திரையாகவும், அலகுகுத்தியும் ஏராளமான பக்தர்கள் வந்து முருக பெருமானை தரிசனம் செய்தனர்.
இந்தநிலையில் தைப்பூச திருவிழா முடிந்த பின்னரும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். 

அதன்படி நேற்று தை அமாவாசை என்பதால் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். இதனால் படிப்பாதை, மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகிய இடங்களில் கூட்டம் அலைமோதியது.

இதேபோல் பாதயாத்திரை பக்தர்களின் வருகையும் அதிகம் இருந்தது. குறிப்பாக பழனி-பொள்ளாச்சி சாலையில் பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும், அலகுகுத்தியும் பழனிக்கு வந்தனர். 

முன்னதாக அவர்கள் ரதவீதி, பெரியகடைவீதி, பஸ்நிலையம் வழியாக அடிவாரம் வந்தனர். பின்னர் திருஆவினன்குடி, மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

Next Story