ஆயுதங்கள், வெடிபொருள் குடோன்களை போலீசார் கண்காணிக்க வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார்


ஆயுதங்கள், வெடிபொருள் குடோன்களை  போலீசார் கண்காணிக்க வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார்
x
தினத்தந்தி 31 Jan 2022 2:21 PM GMT (Updated: 31 Jan 2022 2:21 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, ஆயுதங்கள், வெடி பொருட்கள் குடோன்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தி உள்ளார்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, ஆயுதங்கள், வெடி பொருட்கள் குடோன்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 18 பேரூராட்சிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு தேர்தல் நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலீஸ் துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. 
கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், தேர்தல் நடைபெறும் பகுதிகளில் சுவரொட்டிகள், டிஜிட்டல் பேனர்கள் ஆகியவைகள் ஒட்டப்படுவதை அந்தந்த பகுதி போலீசார் கண்காணிக்க வேண்டும். சுவர் விளம்பரங்கள் வரைவதை கண்காணிக்க வேண்டும். பிரச்சினை ஏற்படக்கூடிய வாக்குசாவடிகள் உள்ள பகுதிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் வைத்திருக்கும் குடோன்களை போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சட்டவிரோதமாக கஞ்சா போன்ற போதை பொருள்கள் விற்பனையை கட்டுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கணேஷ் (தூத்துக்குடி நகரம்), வெங்கடேசன் ( (ஸ்ரீவைகுண்டம்), சங்கர் (மணியாச்சி), உதயசூரியன் (கோவில்பட்டி), பிரகாஷ் (விளாத்திகுளம்), ராஜூ (சாத்தான்குளம்), பிரேமானந்தன் (மாவட்ட குற்ற ஆவண கூடம்), பாலாஜி (மதுவிலக்கு), பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஷாமளா தேவி, கணேஷ்குமார், பவித்ரா மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story