நகராட்சிகளில் போட்டியிட 3 பேர் வேட்புமனு தாக்கல்


நகராட்சிகளில் போட்டியிட 3 பேர் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 31 Jan 2022 2:23 PM GMT (Updated: 31 Jan 2022 2:23 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் நகராட்சிகளில் போட்டியிட 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.2½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் நகராட்சிகளில் போட்டியிட 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.2½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 

வேட்புமனு தாக்கல்

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. 4 நகராட்சிகளில் 108 வார்டுகள், 11 பேரூராட்சிகளில் 186 வார்டுகள் என மொத்தம் 294 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கியது. 

தேர்தலில் போட்டியிடுபவர்கள் சம்பந்தப்பட்ட நகராட்சி அல்லது பேரூராட்சியில் வரி பாக்கி இல்லை என்ற சான்றை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் குற்ற வழக்குகள் இல்லை என்பதற்கு போலீஸ் வழங்கும் சான்றை இணைக்க வேண்டும். இதனால் ஊட்டி நகராட்சி அலுவலக வருவாய் பிரிவில் குடிநீர், சொத்து உள்ளிட்ட வரிகள் செலுத்தி தடையில்லா சான்று பெற தேர்தலில் போட்டியிடுபவர்கள், முன்மொழிபவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 3-வது நாளான இன்று ஊட்டி நகராட்சியில் ஒருவர், குன்னூர் நகராட்சியில் 2 பேர் என மொத்தம் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். பிற நகராட்சிகள், பேரூராட்சிகளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 

பணம் பறிமுதல்

இதற்கிடையில் குன்னூரில் பறக்கும் படையினர் இன்று வாகன சோதனை நடத்தியபோது டபுள்ரோடு பகுதியில் கோவையில் இருந்து காரில் வந்த உஷாராணி என்பவர் ஆவணம் இன்றி ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கொண்டு வந்தார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது திருமணத்துக்கு நகை வாங்க பணம் கொண்டு செல்வதாக கூறினார். ஆனால் ஆவணம் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேர்தலையொட்டி 45 பறக்கும் படைகள் அமைத்து வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை ஊட்டியில் ரூ.60 ஆயிரம், குன்னூரில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம், கோத்தகிரியில் ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இதேபோன்று கோவை வடவள்ளி-தொண்டாமுத்தூர் சாலையில் காரில் வந்த சிவரஞ்சனி என்பவரிடம் ரூ.86 ஆயிரத்து 700 இருந்தது. ஆனால்  ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி கருவூலகத்தில் ஒப்படைத்தனர். 


Next Story