கண்காணிப்பு கேமராவை உடைத்தவர்களை கைது செய்யக்கோரி பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்


கண்காணிப்பு கேமராவை உடைத்தவர்களை கைது செய்யக்கோரி பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2022 2:54 PM GMT (Updated: 31 Jan 2022 2:54 PM GMT)

கண்காணிப்பு கேமராவை உடைத்தவர்களை கைது செய்யக்கோரி பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜ். விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரி ஒவருக்கும் வண்டிபாதை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடராஜ் அமைத்திருந்த வேலி கற்கள் மற்றும் காண்காணிப்பு கேமராக்களை 10-க்கும் மேற்பட்ட கும்பல் உடைத்தது. இதுகுறித்து புகாரின் பேரில் பங்களாப்புதூர் போலீசார் வருவாய்த்துறை அதிகாரி உள்பட 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இந்த வழக்கில் ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. 
இந்த நிலையில் வேலி கற்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவற்றை உடைத்தவர்களை கைது செய்யக்கோரி நடராஜ் மற்றும் அவருடைய உறவினர்கள், வக்கீல்கள் நேற்று பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் போலீஸ் நிலையம் முன்பு உட்கார்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் பங்களாப்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் கூறுகையில், ‘வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். எனினும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story