வாக்குப்பதிவு எந்திரங்களை கையாள்வது குறித்து பயிற்சி


வாக்குப்பதிவு எந்திரங்களை கையாள்வது குறித்து பயிற்சி
x
தினத்தந்தி 31 Jan 2022 4:38 PM GMT (Updated: 31 Jan 2022 4:38 PM GMT)

வாக்குப்பதிவு எந்திரங்களை கையாள்வது குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

புவனகிரி,

புவனகிரி பேரூராட்சி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அருள்குமார் கலந்துகொண்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார். இதில் வாக்குப்பதிவு எந்திரத்தை கையாள்வது குறித்தும், வாக்குப்பதிவு செய்த வாக்காளர்களின் கையில் மை வைப்பது, வாக்குச்சாவடி மையத்தில் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியில் மண்டல தேர்தல் அலுவலர்கள் சிவனேசன், பிரகாஷ், தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி தலைமை எழுத்தர் லோகேஸ்வரன் நன்றி கூறினார். 

கிள்ளை, அண்ணாமலைநகர் 

கிள்ளை மற்றும் அண்ணாமலைநகர் பேரூராட்சிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி நடந்தது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள்  செல்வி, பாலமுருகன், மண்டல தேர்தல் அலுவலர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல் குறித்து பயிற்சி அளித்தனர். முடிவில் கிள்ளை பேரூராட்சி தலைமை எழுத்தர் செல்வம் நன்றி கூறினார்.

விருத்தாசலம்

விருத்தாசலம் தென்கோட்டை வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சியில் மண்டல தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதில் மாதிரி வாக்குப்பதிவு நடத்துதல், வாக்குப்பதிவிற்கு முந்தையநாள் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய பணிகள், முக்கிய அம்சங்கள், வாக்குப்பதிவு நாளன்று என்னென்ன செய்யவேண்டும், எந்திரங்கள் பழுதடைந்தால் மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்குப்பதிவு எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருத்தல் உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமை விருத்தாசலம் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயபிரகாஷ் நாராயணன் நேரில் பார்வையிட்டார். அப்போது வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்படும் விதம், மாதிரி வாக்குப்பதிவு, அவை பழுதடைந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

திட்டக்குடி

திட்டக்குடியில் நகராட்சி சார்பில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு தேர்தல் நடத்தும் அலுவலர் ஆண்டவர் தலைமையில் நடைபெற்றது. இதில் இளமங்கலம், திட்டக்குடி, வதிஷ்டபுரம், தர்மக்குடிக்காடு, கோழியூர், உள்ளிட்ட 24 வார்டுகளில் பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வீரமணி, மண்டல அலுவலர்கள் கருப்பையன், சிவகுமார், மதியழகன், துணை மண்டல அலுவலர்கள் ரவி, ராஜேந்திரன், தங்கதுரை, தேர்தல் பிரிவு அலுவலர்கள் பழனிசாமி, சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கங்கைகொண்டான் 

மந்தாரக்குப்பம் கங்கைகொண்டான் பேரூராட்சியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி தேர்தல் அலுவலர் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் 15 வார்டுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் கலந்துகொண்டனர் அவர்களுக்கு கடலூர் மண்டல தேர்தல் அதிகாரி மாணிக்கம் வாக்குப்பதிவு எந்திரத்தை கையாளும் முறை குறித்து பயிற்சி அளித்தார். அப்போது பாருக் உள்பட பலர் உடனிருந்தனர். 

Next Story