ஆக்கிரமிப்பை அகற்றாததை கண்டித்து தேர்தலை புறக்கணிக்க பொதுமக்கள் முடிவு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 31 Jan 2022 4:41 PM GMT (Updated: 31 Jan 2022 4:41 PM GMT)

குளித்தலை கலப்பு காலனி பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தேர்தலை புறக்கணிக்க பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

குளித்தலை
மனு 
குளித்தலை அண்ணாநகர் கலப்பு காலனி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் தங்களது பகுதியில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- 
குளித்தலை அண்ணாநகர் கலப்பு காலனி பகுதியில் ஆதிதிராவிட நலத்துறையால் இலவசமாக வழங்கப்பட்ட இடத்தில் அரசால் ஒதுக்கப்பட்ட சாலையை ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டி பல வருடங்களாக அனுபவித்து வருகின்றனர். அந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மாவட்ட கலெக்டர், குளித்தலை வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர்களுக்கு மனு அளித்தும் தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
 புறக்கணிக்க  முடிவு
இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது 15 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்றி தருவதாக நகராட்சி ஆணையர் உறுதியளித்திருந்தார். இதன் பின்னரும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. அரசின் மீதும், அரசு அதிகாரிகளின் மீதும் நம்பிக்கை இழந்து விட்ட காரணத்தினால் இப்பகுதி பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து, நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பது என்று முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர். 
மேலும் தாங்கள் தேர்தலை புறக்கணிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் மாவட்ட கலெக்டர், குளித்தலை நகராட்சி ஆணையர், கோட்டாட்சியர் ஆகியோருக்கு பதிவு தபால் மூலம் தங்கள் மனுக்களை அனுப்பியுள்ளனர்.

Next Story