தை அமாவாசையையொட்டி நெருப்பூர் முத்தையன் கோவிலில் சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


தை அமாவாசையையொட்டி நெருப்பூர் முத்தையன் கோவிலில் சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 31 Jan 2022 4:54 PM GMT (Updated: 31 Jan 2022 4:54 PM GMT)

தை அமாவாசையையொட்டி நெருப்பூர் முத்தையன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஏரியூர்:
தை அமாவாசையையொட்டி நெருப்பூர் முத்தையன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முத்தையன் கோவில்
ஏரியூர் அருகே நாகமரை ஊராட்சிக்குட்பட்ட வனப்பகுதியில் முத்தையன் சாமி குகைக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதம்தோறும் அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று தை அமாவாசை என்பதால் முத்தையன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் குகையில் உள்ள சாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் பொங்கல் வைத்தும், முடி காணிக்கை செலுத்தியும் சாமியை வழிபட்டனர்.
தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது நேர்த்திக்கடனுக்காக தரையில் படுத்து இருந்த பக்தர்கள் மீது சாமியை எடுத்து வந்தவர்கள் தாண்டி சென்றனர். மேலும் பக்தர்கள் குழந்தைகளின் எடைக்கு எடை நாணயம், வாழை பழம் உள்ளிட்டவற்றை துலாபாரம் கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அன்னதானம்
இதில் நாகமரை, நெருப்பூர், ராமகொண்டஅள்ளி, செல்லமுடி, பூச்சூர், ஏரியூர், மேட்டூர், மேச்சேரி, கொளத்தூர், பண்ணவாடி, கோட்டையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். 

Next Story