தர்மபுரி நகராட்சி தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி


தர்மபுரி நகராட்சி தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 31 Jan 2022 4:54 PM GMT (Updated: 31 Jan 2022 4:54 PM GMT)

தர்மபுரி நகராட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தர்மபுரி:
தர்மபுரி நகராட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கான ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தர்மபுரி நகராட்சி பகுதியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 24 ஆண் வாக்குச்சாவடியும், 24 பெண் வாக்குச்சாவடியும், 9 பொது வாக்குச்சாவடியும் என மொத்தம் 57 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 
இந்த தேர்தலையொட்டி அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் ஒரு தலைமை வாக்குச்சாவடி அலுவலர், 2 வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் தலைமை வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. 
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இந்த முகாமிற்கு நகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சித்ரா சுகுமார் தலைமை தாங்கினார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஜெயசீலன், ஜெயவர்மன், கலைவாணி, மண்டல தேர்தல் அலுவலர்கள் ரேவதி, நடராஜன், பிரியா, ரமண சரண், மதுரகவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி தேர்தல் அலுவலர் மாதையன் வரவேற்றார்.
இந்த முகாமில் தேர்தல் பார்வையாளரும், மகளிர் திட்ட அலுவலருமான பாபு கலந்துகொண்டு அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார். வாக்குப்பதிவின் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் எப்படி வாக்கை பதிவுசெய்ய வேண்டும். தேர்தல் தொடர்பான நடைமுறைகள் குறித்தும், வாக்குச்சாவடியில் முகவர்களின் செயல்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விளக்கம் அளித்தார். அப்போது அலுவலர்களின் சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் அளித்தார். இதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் வாக்கை எப்படி பதிவு செய்வது என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

Next Story