சங்ககால உறைகிணறுகள் கண்டெடுப்பு


சங்ககால உறைகிணறுகள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 31 Jan 2022 5:06 PM GMT (Updated: 31 Jan 2022 5:06 PM GMT)

தளவானூர் தென்பெண்ணையாற்றில் சங்ககால உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளது.

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள தளவானூர் தென்பெண்ணை ஆற்றின் மேற்பரப்பில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குடிநீர் தேவைக்காக மக்கள் பயன்படுத்திய சுடுமண் உறைகிணறு மண்ணில் புதையுண்டு இருப்பதை கண்டறிந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ஏற்கனவே எனதிரிமங்கலம் மற்றும் உளுந்தாம்பட்டு தென்பெண்ணையாற்று பகுதியில் களஆய்வு செய்தபோது சுடுமண் குடிநீர் குழாய், சுடுமண் பொம்மைகள் ஆகியவை கண்டறியப்பட்டன. இதை தொடர்ந்து ஆற்றுப்படுகையில் மேற்புற களஆய்வு செய்தபோது தளவானூர் தென்பெண்ணையாற்றில் சங்க காலத்தை சேர்ந்த 4 உறைகிணறுகள், கருப்பு மற்றும் கருப்பு- சிவப்பு நிற பானைஓடுகள், காப்பர் ரிங் ஆகியவை கண்டறியப்பட்டன.

பாதுகாக்க வேண்டும்

 வறட்சி காலங்களில் தண்ணீர் வற்றும்போது இந்த உறைகிணறுகள் அக்காலத்து மக்களுக்கு தண்ணீர் தேவையை பெரிதும் நிவர்த்தி செய்தன. இவற்றில் இருந்து சுகாதாரமான குடிநீரை பெற்று பயன்படுத்தினர். தற்போது தளவானூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 4 உறைகிணறுகளும் மண்ணில் புதையுண்டும், சிதைந்தும் காணப்படுகின்றது. தென்பெண்ணையாற்று பகுதிகளில் சங்ககால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்தாலும் வெள்ளப்பெருக்கினால் எல்லாமே சிதைந்து அழிவின் விளிம்பில்தான் இருக்கின்றது. எனவே இதுபோன்ற உறைகிணறுகள், பானை ஓடுகள், காப்பர் ரிங் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story