நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 31 Jan 2022 5:08 PM GMT (Updated: 31 Jan 2022 5:08 PM GMT)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது

கள்ளக்குறிச்சி

நகர்புற உள்ளாட்சி தேர்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 3 நகராட்சிகள், சின்னசேலம், வடக்கநந்தல், சங்கராபுரம், தியாகதுருகம், மணலூர்பேட்டை ஆகிய 5 பேரூராட்சிகளில் உள்ள 153 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 
இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 200 வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு அன்று வாக்குச்சாவடியில் வாக்காளர் பெயர் சரி பார்த்தல், விரல்களுக்கு மை வைத்தல் மற்றும் வாக்குப் பதிவு எந்திரம் பயன்படுத்துதல், சீல் வைப்பது குறித்து செயல்விளக்க முதற்கட்ட பயிற்சி நேற்று அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்றது. 

கள்ளக்குறிச்சி நகராட்சி

கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள 46 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் என 168 பேருக்கு கள்ளக்குறிச்சி ஏ.கே.டி பள்ளி கூட்டரங்கில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான குமரன் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து மண்டல அலுவலர்கள் ராஜா, சர்ச்சில் காரல்மார்க்ஸ், முரளி ஆகியோர் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு கருவியை பயன்படுத்துதல், சீல் வைத்தல், பெயர் சரிபார்த்தல் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். நகராட்சி தேர்தல் தொடர்பாளர் தாமரைச்செல்வன் மற்றும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சங்கராபுரம் பேரூராட்சி

அதேபோல் சங்கராபுரம் தேர்வு நிலை பேரூராட்சியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். பயிற்சி மைய பொறுப்பாளர்கள் அண்ணாதுரை, ஞானப்பூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் ஜெயபிரகாஷ் வரவேற்றார். மண்டல அலுவலர்கள் கோவிந்தசாமி, மதியழகன் ஆகியோர் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வாக்குப் பதிவு எந்திரத்தின் மூலம் வாக்களிப்பது, சீல் வைப்பது குறித்து பயிற்சி அளித்தனர். இதில் 72 வாக்குப்பதிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல் திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை நகராட்சிகள், சின்னசேலம், வடக்கநந்தல், தியாகதுருகம், மணலூர்பேட்டை ஆகிய பேரூராட்சிகளிலும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு  முதற் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

Next Story