பூம்புகார் கடலில் திரளானோர் புனித நீராடினர்


பூம்புகார் கடலில் திரளானோர் புனித நீராடினர்
x
தினத்தந்தி 31 Jan 2022 5:51 PM GMT (Updated: 31 Jan 2022 5:51 PM GMT)

தை அமாவாசையையொட்டி பூம்புகார் கடலில் திரளானோர் புனித நீராடினர். மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.

மயிலாடுதுறை;
தை அமாவாசையையொட்டி பூம்புகார் கடலில் திரளானோர் புனித நீராடினர். மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.  
புனித நீராடல்
ஆண்டுதோறும் தை மற்றும் ஆடி அமாவாசை மற்றும் மகாளய பட்ச 
அமாவாசை நாட்களில் மக்கள் நீர்நிலைகளில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி கடலோடு கலக்கும் பூம்புகார் சங்கமத் துறையில் மூதாதையர் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபட்டால் காசிக்கு சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். 
பூம்புகார் சங்கமத்துறை
நேற்று தை அமாவாசையையொட்டி அதிகாலை முதல் திரளான பக்தர்கள் பூம்புகார் சங்கமத் துறையில் புனித நீராடி தங்கள் முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபட்டனர். அப்போது சுமங்கலி பெண்கள் தங்கள் குடும்பம் செழிக்க எலுமிச்சம் பழம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம், கருகமணி, மஞ்சள் உள்ளிட்ட மங்கல பொருட்களை படையல் செய்து காவிரி ஆற்றில் விட்டு காவிரி தாயை வழிபட்டனர். 
காவிரி துலாக்கட்டம்
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டம் காசிக்கு இணையான புனித நீராடும் இடமாக விளங்குகிறது. இங்குள்ள காவிரிக்கரையில் காசியைப்போன்று விஸ்வநாதர், கேதாரநாத் கோவில்களும் கரையிலேயே அமைந்துள்ளன. மேலும் ஆண்டுதோறும் மயிலாடுதுறை பகுதியில் உள்ள முக்கிய சிவாலயங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் கொண்டுவரப்பட்டு கடைமுக தீர்த்தவாரி நடைபெறும். அப்போது வெளி மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து புனித நீராடுவார்கள். 
குறைந்த அளவு தண்ணீர்
தை மாதத்தில் வரும் அமாவாசையன்று மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி தை அமாவாசையான நேற்று மயிலாடுதுறை துலா கட்ட காவிரிக்கரையில் ஏராளமான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தும், புனித நீராடியும் வழிபாட்டில் ஈடுபட்டனர். இருப்பினும் காவிரி ஆற்றில் குறைந்த அளவு தண்ணீர் சென்றதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Next Story